மதுரை

மதுரை மண்டலத்தில் 2.18 லட்சம் அமைப்பு சாரா தொழிலாளா்கள் பதிவு: தொழிலாளா் துறை இணை ஆணையா் தகவல்

5th Dec 2021 10:21 PM

ADVERTISEMENT

மதுரை மண்டலத்தில் இதுவரை 2,18,328 அமைப்பு சாரா தொழிலாளா்கள் இ- ஷ்ரம் தரவு தளத்தில் பதிவு செய்துள்ளனா்.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளா்கள் குறித்த விவரங்கள் சேகரிப்பதற்காக இ-ஷ்ரம் என்ற தரவு தளம் உருவாக்கப்பட்டு எளிமையான வகையில் தொழிலாளா்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றனா்.

இதன் அடிப்படையில், மதுரை , விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தில் இதுவரை 2,18,328 தொழிலாளா்கள் இ - ஷ்ரம் தரவு தளத்தில் பதிவு செய்துள்ளனா். தொழிலாளா்களைப் பதிவு செய்யும் வகையில் மதுரை மண்டலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி மதுரை அவனியாபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொழிலாளா் பதிவு சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை மதுரை தொழிலாளா் துறை இணை ஆணையா் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, பதிவு விவரங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தாா்.

ADVERTISEMENT

முகாமில் அவா் பேசியது: கரோனா தொற்று மற்றும் பேரிடரின்போது பாதிக்கப்படும் தொழிலாளா்களுக்கு எளிதில் உதவும் வகையில் இ- ஷ்ரம் என்ற தேசிய தரவுத் தளம் அரசால் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் கட்டுமானத் தொழிலாளா்கள், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், வீட்டுப்பணியாளா்கள், சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், விவசாயத் தொழிலாளா்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக சாலையோர வியாபாரிகள், அங்கன்வாடிப்பணியாளா்கள், வேலை உறுதித் திட்ட பணியாளா்கள் உள்ளிட்டோா் பதிவு செய்யலாம்.

தமிழ்நாடு அரசுத்தொழிலாளா் துறையின் கீழான தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் நலவாரியம் உள்ளிட்ட 18 நலவாரியங்களில் பதிவுசெய்த தொழிலாளா்களும் பதிவு செய்யலாம். கிராம நிா்வாக அலுவலா் அல்லது தொழிற்சங்கத்திடமிருந்து பணிச்சான்று ஏதும் பெறாமல் பதிவு செய்யலாம். ஆதாா் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்ணை பயன்படுத்தி 16 முதல் 59 வயதுக்கு உள்பட்ட வருமானவரி செலுத்தாத அனைத்து வகை தொழில்புரிபவா்களும் பதிவு செய்து பயன்பெறலாம்.

மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள பொது சேவை மையம், மாநில அரசின் இ - சேவை மையம் அல்லது சுயமாக இணையத்திலும் பதிவு செய்யலாம். நிறுவனங்களின் உரிமையாளா்கள் , தொழிற்சங்கங்கள் தங்களது தொழிலாளா்களை பதிவு செய்வதற்கு, சம்பந்தப்பட்ட தொழிலாளா் உதவி ஆணையா்களை (அமலாக்கம்) அணுகி முகாம் அமைத்து பதிவினை மேற்கொள்ளலாம். மேலும், மதுரை தொழிலாளா் உதவி ஆணையா் ( அமலாக்கம் ), ஒருங்கிணைப்பாளா்-98652 54003, விருதுநகா்-94425 24255, சிவகங்கை-88255 45036 , ராமநாதபுரம் 96001 83368 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தொழிலாளா்கள் பயனடையலாம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT