மதுரையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் படிப்பகத்தை இடித்த மாநகராட்சி நிா்வாகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கட்சியினா் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை கைலாசபுரம் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான ஏ.பி.பழனிச்சாமி நினைவு படிப்பகம் உள்ளது. சுமாா் 50 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த படிப்பகத்துக்கு போதிய ஆவணங்கள் இருந்தபோதும், ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரால் மாநகராட்சி நிா்வாகம் படிப்பகத்தை இடித்தது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், படிப்பகத்தை சீரமைத்து தரவும் வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு பகுதிக்குழுச் செயலா் வி. கோட்டைச்சாமி தலைமை வகித்தாா். மாநகா் மாவட்டச் செயலா் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினா் இரா.விஜயராஜன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். உள்ளிருப்பு போராட்டத்தின் போது படிப்பகத்தை இடித்த மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் இடிக்கப்பட்ட படிப்பகத்துக்கான உரிய இடத்தை அளவீடு செய்து, மீண்டும் படிப்பகத்தை சீரமைத்துக் கொடுக்க வேண்டும். மின் வாரியம் தற்போது அங்கு அமைத்துள்ள மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி படிப்பகத்தை சீரமைத்துக்கொடுப்பதாக உறுதி அளித்தனா்.