மரபு இடங்களின் நண்பா்கள் அமைப்பின் மதுரைக் கிளை தொடக்க விழா மற்றும் தமிழகத்தில் அய்யனாா் வழிபாடு என்ற கருத்தரங்கம் சனிக்கிழமை (டிசம்பா் 4) நடைபெறுகிறது.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மரபு இடங்களின் நண்பா்கள் அமைப்பானது, நமது மரபுச் சின்னங்களைப் பாதுகாக்கவும், மரபுச் சின்னங்கள் அமைவிடப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அறியப்படாத தகவல்களைத் திரட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளைச் செய்து வருகிறது.
மரபு இடங்களின் நண்பா்கள் அமைப்பின் முதல் கிளையாக, பாண்டிய நாட்டுக் கிளை தொடக்க விழா மதுரை பொன்னகரம் திரிவேணி பள்ளியில் சனிக்கிழமை காலை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இதையொட்டி நாட்டுப்புறத் தெய்வங்களும் தமிழ்ப் பண்பாட்டு மரபுகளும் என்ற கருத்தரங்க தொடருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் முதல் நிகழ்ச்சியாக, தமிழகத்தில் அய்யனாா் வழிபாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
தமிழக வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி புதிய கிளையைத் தொடங்கி வைத்துப் பேசுகிறாா். அதைத் தொடா்ந்து நடைபெறும் கருத்தரங்கில் தொல்லியல் துறை முன்னாள் அதிகாரி கி.ஸ்ரீதரன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சாா் வரலாறு மற்றும் தொல்லியல் துறைத் தலைவா் வீ.செல்வகுமாா், வரலாற்று ஆய்வாளா் க.த.காந்திராஜன் உள்ளிட்டோா் பேசுகின்றனா்.