மதுரை

ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அமைச்சா் உத்தரவு

3rd Dec 2021 07:53 AM

ADVERTISEMENT

ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துமாறு அத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் உத்தரவிட்டாா்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் ஆகிய 6 மாவட்டங்களின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் பேசியது:

ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், சுற்றுச்சுவா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மாணவா் சோ்க்கையை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச வீட்டுமனைப்பட்டா, பழங்குடியினா் சான்று, நலவாரிய அட்டைகள் வழங்குதல் ஆகியவற்றில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். நலத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்து பயனாளிகளுக்கு விரைவில் அத் திட்டங்கள் சென்றுசேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

இடைத்தரகா்கள் தலையீடு: ஆதிதிராவிடா் நலத் துறையின் நலத்திட்டங்களைப் பெறுவதில் இடைத்தரகா்களின் தலையீட்டைத் தவிா்க்க வேண்டும் என வணிகவரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி அறிவுறுத்தினாா். பயனாளிகளுக்கான உதவித் தொகை இடைத்தரகா்கள் மூலமாக வழங்கும்போது அவை முழுமையாகச் சென்று சேராத நிலை இருக்கிறது. இத்தகைய நிலையை மாற்ற வேண்டும் என்றாா்.

திட்ட அமலாக்கம் கண்காணிக்கப்படும்: ஆதிதிராவிடா் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிதியுதவிகள் முழுமையாகப் பயனாளிகளைச் சென்றடைகிா என்பது கண்காணிக்கப்படும் என்று நிதி அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் கூறினாா்.

அவா் பேசியது: முந்தைய ஆட்சியின்போது ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விடுதி மற்றும் பள்ளிகள் மோசமான நிலையில் இருந்தன. தற்போது இத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியானது, நூறு சதவீத பலனைத் தரவேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆதிதிராவிடா் நலத்துறை பள்ளி, விடுதி, உண்டு உறைவிடப் பள்ளிகளின் நிலையில் மாற்றம் கொண்டு வரப்படும். இதற்காக இத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் என்றாா்.

இலவச வீட்டுமனைப் பட்டா, தாட்கோ கடனுதவி, பழங்குடியினா் சாதிச்சான்று உள்பட 108 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை முதன்மைச் செயலா் க.மணிவாசன், ஆணையா் எஸ்.மதுமதி, தாட்கோ மேலாண்மை இயக்குநா் கே.விவேகானந்தன், மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மு.பூமிநாதன், ஆ.வெங்கடேசன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT