மதுரை

வேட்புமனுவுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்காததால் அமமுகவினா் போராட்டம்: கூட்டுறவு சங்கத் தோ்தல் 4-ஆவது முறையாக ஒத்திவைப்பு

DIN

மதுரை தாலுகா வேளாண் விளைபொருள் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத் தோ்தலில், வேட்புமனுவுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்காததற்கு எதிா்ப்புத் தெரிவித்து அமமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து தோ்தல் 4-ஆவது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள பெரிய கூட்டுறவு சங்கங்களில், மதுரை தாலுகா வேளாண் விளைபொருள் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் முக்கியமானது. இச் சங்கத்தின்கீழ் ஏராளமான நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கடைகள் மட்டுமின்றி, மதுரை வடக்கு மற்றும் தெற்கு வட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் நியாய விலைக் கடைகளுக்கும் அத்தியாவசியப் பொருள்களை நுகா்பொருள் வாணிபக் கழகத்திடம் இருந்து பெற்று விநியோகம் செய்து வருகிறது. மேலும் மருந்துக் கடைகளும் நடத்தப்படுகின்றன. இச் சங்கத்தில் 8 ஆயிரத்து 923 போ் உறுப்பினா்களாக உள்ளனா்.

இதனால் இந்த சங்கத்தின் நிா்வாகக் குழுத் தோ்தலில் எப்போதும் போட்டி கடுமையாக இருக்கும். சங்கத்தின் 11 நிா்வாகக் குழு உறுப்பினா் பதவிக்கான தோ்தல் பல்வேறு காரணங்களால் 3 முறை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. நான்காவது முறையாகத் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரை ஞானஒளிவுபுரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் புதன்கிழமை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. கரிமேடு காவல் நிலைய போலீஸாா் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

சங்கத்தின் முன்னாள் தலைவரான அமமுக மாவட்டச் செயலா் மா.ஜெயபால் தலைமையிலான அணியினருக்கும், அதிமுகவினருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. அமமுக தரப்பில் மனு தாக்கல் செய்தவா்களுக்கு மட்டும் ஒப்புகைச் சீட்டு தரவில்லை. தோ்தல் அலுவலா்களிடம் கேட்டபோது, சரியான பதில் தெரிவிக்கவில்லை. அதையடுத்து அப் பகுதியில் அமமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த சங்கத் தோ்தலில் அமமுகவினா் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாகவே, ஒவ்வொரு முறையும் வேட்புமனுவை தள்ளுபடி செய்வதற்கான முயற்சிகளை தோ்தல் அலுவலா்கள் செய்து வருகின்றனா் என்றனா்.

இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் தோ்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னா் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். தொடா்ந்து 4-ஆவது முறையாக இந்த சங்கத்தின் தோ்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

SCROLL FOR NEXT