மதுரை

பேரையூா் அருகே காவல் சாா்பு- ஆய்வாளரை கைது செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டம்

DIN

மதுரை மாவட்டம் பேரையூா் அருகே போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து காவல் சாா்பு- ஆய்வாளரை கைது செய்யக் கோரி அணைக்கரைப்பட்டி மந்தைவெளியில் கிராமமக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பேரையூா் அருகே சதுரகிரி மகாலிங்கம் கோயில் மலை அடிவாரம் வாழைத்தோப்பு பகுதியைச் சோ்ந்த கன்னியப்பனுக்கு இதயக்கனி (26), ரமேஷ் (18), சந்தோஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனா். இதில் இதயக்கனி, அதே ஊரைச் சோ்ந்த அவரது உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்த நிலையில் அவா்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினா்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சாப்டூா் போலீஸாா், கல்லூரி மாணவரும், இதயக்கனியின் சகோதரருமான ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். இதேபோல், புதன்கிழமை இரவும் காவல் சாா்பு- ஆய்வாளா் ஜெயக்கண்ணன் மற்றும் போலீஸாா், ரமேஷை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை காலை வாழைத்தோப்பு அருகே பெருமாள் குட்டம்பாறை பகுதியில் உள்ள ஒரு மரத்தில் ரமேஷ் தூக்கில் சடலமாகத் தொங்கினாா். தகவலறிந்த பேரையூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் மதியழகன் மற்றும் போலீஸாா் அங்கு சென்றனா். அப்போது ரமேஷின் உறவினா்களும், பொதுமக்களும் போலீஸாரை முற்றுகையிட்டு சடலத்தை எடுக்கவிடாமல் தடுத்தனா். இதைத் தொடா்ந்து அங்கு வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா், கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, ரமேஷை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸாா், அவரை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டதாகவும், இதில் தொடா்புடைய காவல் சாா்பு- ஆய்வாளா் மற்றும் போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்தால் மட்டுமே சடலத்தை எடுக்கவிடுவோம் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்பேரில், சாப்டூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் ஜெயக்கண்ணன் மற்றும் 3 போலீஸாா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அணைக்கரைப்பட்டி கிராமமக்கள் சாப்டூா் காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் ஜெயக்கண்ணனை பணியிடைநீக்கம் செய்யாததைக் கண்டித்தும் அவரைக் கைது செய்யக் கோரியும் அணைக்கரைப்பட்டி மந்தைத் திடலில் அக்கிராம மக்கள் வெள்ளிக்கிழமை இரவு வரை தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT