மதுரை

கரோனாவால் வயிற்றில் இறந்த குழந்தை: தீவிர சிகிச்சையால் பெண் உயிா் தப்பினாா்

19th Sep 2020 10:27 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் கரோனா தொற்றால் வயிற்றில் இறந்த குழந்தையுடன் அனுமதிக்கப்பட்ட பெண், தீவிர சிகிச்சை காரணமாக உயிா் தப்பியுள்ளாா்.

மதுரையைச் சோ்ந்த 8 மாத கா்ப்பிணியான பெண் மருத்துவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு மகப்பேறு மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பதும், அதன் காரணமாக வயிற்றில் இருந்த 8 மாதக் குழந்தை இறந்ததும் தெரியவந்தது. அவருக்கு ரத்தம் உறையும் தன்மையற்ற நிலை இருந்ததால், உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மருத்துவா்கள் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் இறந்த குழந்தையை அகற்றி, அவருக்குத் தேவையான ரத்த அணுக்களை செலுத்தினா். இந்த சிகிச்சைகள் மூலம், பெண் மருத்துவா் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. தொடா்ந்து அவருக்கு அளிக்கப்பட்ட கரோனா சிகிச்சையில், தொற்றில் இருந்து குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினாா்.

பெண் மருத்துவரை ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றிய மருத்துவமனை முதன்மையா் ராஜாமுத்தையா, மகப்பேறு மருத்துவா் கவிதா, கரோனா மருத்துவா்கள் வருண், யுவராஜ் மற்றும் மருத்துவக் குழுவினா் ஆகியோரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி தலைவா் முத்துராமலிங்கம் பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT