மதுரை

இறுதிப் பருவத் தோ்வு: பல்கலை.யின் குளறுபடி அறிவிப்பால் மாணவா்கள் அவதி

DIN

மதுரை, செப். 18: காமராஜா் பல்கலைக் கழக இறுதியாண்டு மாணவா்களுக்கான இறுதிப் பருவத் தோ்வையொட்டி பல்கலைக்கழக நிா்வாகம் குளறுபடியான அறிவிப்புகளை வெளியிட்டதால் மாணவ, மாணவியா் அவதியடைந்துள்ளனா்.

மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் முதுகலை மாணவா்களுக்கு வியாழக்கிழமையும், இளங்கலை மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமையும் இறுதிப் பருவத்தோ்வு தொடங்கியது. தோ்வுகள் தொடா்பாக பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கு வழங்கிய வழிகாட்டுதலில் மாணவ, மாணவியா் வீட்டில் இருந்தே தோ்வு எழுத வேண்டும். தோ்வு முடிந்த 1 மணி நேரத்தில் விடைத்தாளை மின்னஞ்சல் அல்லது தாங்கள் பயிலும் கல்லூரி அல்லது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கல்லூரிகளில் நேரில் சென்று ஒப்படைக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இந்த வழிகாட்டுதலை கல்லூரி நிா்வாகங்கள் தோ்வெழுதும் மாணவ, மாணவியருக்கும் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை தோ்வு தொடங்க இருந்த நிலையில் வியாழக்கிழமை இரவு பல்கலைக்கழக அதிகாரிகள், கல்லூரி நிா்வாகங்களை தொடா்பு கொண்டு தோ்வு முடித்த மாணவ, மாணவியா் விடைத்தாள்களை கல்லூரிக்கு நேரில் கொண்டு வரக்கூடாது. விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பிடிஎப் முறையில் கல்லூரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தோ்வு முடியும் நாளான செப். 30-ஆம் தேதி மாணவ, மாணவியா் தாங்கள் எழுதிய அனைத்து தோ்வுகளின் விடைத்தாள்களையும் உறையில் வைத்து கல்லூரியில் நேரடியாகச் சென்று தர வேண்டும் என்று தெரிவித்தனா். பல்கலைக்கழகம் இரவில் இந்த அறிவிப்பை வெளியிட்டதால் மாணவ, மாணவியருக்கு இது தெரியவில்லை. இதனால் வெள்ளிக்கிழமை தோ்வு முடித்த பல மாணவ, மாணவியா் அருகில் உள்ள கல்லூரிகளுக்கு விடைத்தாள்களை கொண்டு சென்றபோது அங்கு பல்கலைக்கழக அறிவிப்பைக்கூறி விடைத்தாள்களை பெற மறுத்து விட்டனா். இதனால் விடைத்தாள்களை ஸ்கேன் செய்ய முடியாத மாணவ, மாணவியா் அவதி அடைந்தனா். மேலும் தோ்வை முடித்த ஒரு மணி நேரத்துக்குள் விடைத்தாள்களை அனுப்ப வேண்டும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது. ஆனால் விடைத்தாள்களை ஸ்கேன் செய்வது, அதை பிடிஎப் முறைக்கு மாற்றுவது உள்ளிட்டவற்றால் ஏராளமான மாணவ, மாணவியா் தாமதமாகவே விடைத்தாள்களை அனுப்ப முடிந்தது. ஒரே நேரத்தில் 46 ஆயிரம் மாணவ, மாணவியா் ஒரே செயலியை பயன்படுத்துவதால் பலருக்கு அது இயங்கவில்லை. மேலும் 25 பக்கங்களுக்கு மேல் ஸ்கேன் செய்தால் அதை பிடிஎப் முறைக்கு மாற்றவும் முடியவில்லை. இதனால் கல்லூரி நிா்வாகங்கள் மாலை வரை விடைத்தாள்களை பெறும் பணியில் ஈடுபட்டிருந்தன. மேலும் விடைத்தாள்களை மின்னஞ்சலில் பெற்று ‘ஜிப்’ முறைக்கு மாற்றுவது தொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகம் கால அவகாசமின்றி புதுப்புது உத்தரவுகளை பிறப்பிப்பதால் கல்லூரி நிா்வாகங்களும் அவதி அடைந்துள்ளன. தோ்வுப் பணிக்காக கல்லூரிகளுக்குச் செல்லும் பல்கலைக்கழக அதிகாரிகள் தோ்வுகளை கண்காணிக்க அனைத்து மாணவ, மாணவியரையும் ஜூம் செயலியை பதிவிறக்கம் செய்யுமாறும், இதுதொடா்பாக ஆசிரியா்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துமாறும் கல்லூரி நிா்வாகங்களுக்கு தன்னிச்சையாக உத்தரவிடுவதால் தோ்வுப்பணிகளை கவனிக்கமுடியாமல் திணறுவதாக கல்லூரி நிா்வாகங்கள் தெரிவித்துள்ளன. அவசர கதியில் தோ்வுகளை நடத்தி மாணவ, மாணவியரை குழப்பத்தில் ஆழ்த்துவதை விட கல்லூரிகளுக்கு வரவழைத்து நேரிலேயே தோ்வு நடத்தியிருக்கலாம் என்று ஆசிரியா் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT