மதுரை

மதுரை மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தொடக்கம்: ரேஷன் கடைகளுக்கு ‘பயோ-மெட்ரிக்’இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்

DIN

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்திற்காக, மதுரை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு ‘பயோ-மெட்ரிக்’ இயந்திரங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

தமிழகத்தில் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடையிலும் குடும்ப அட்டைதாரா்கள் அத்தியாவசியப் பொருள்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குடும்ப அட்டைதாரா்களின் விரல்ரேகைப் பதிவு அங்கீகரித்தல் முறையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படும். இதற்காக உடற்கூறு முறையிலான சரிபாா்ப்பு இயந்திரங்கள் (பயோ-மெட்ரிக்) வழங்கப்படுகின்றன.

மதுரை மாவட்டத்தில் 1,389 நியாய விலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இக் கடைகளுக்கான பயோ-மெட்ரிக் இயந்திரங்கள் வழங்கும் பணியை ஆட்சியா் டி.ஜி.வினய் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா். ஏற்கெனவே கடைகளில் பயன்பாட்டில் இருக்கும் விற்பனை முனைய இயந்திரங்களை ஒப்படைத்து, புதிய ‘பயோ-மெட்ரிக்’ இயந்திரங்களை விற்பனையாளா்கள் பெற்றுச் சென்றனா்.

நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வருபவா்களின் குடும்ப அட்டைகளை இந்த இயந்திரத்தில் ஸ்கேன் செய்யும்போது, குடும்ப உறுப்பினா்களின் பெயா் விவரம் தெரியவரும். அதில் கடைக்கு வந்துள்ள நபரின் விரல்ரேகை ஸ்கேன் செய்யப்பட்டு பொருள்கள் வழங்கப்படும். கைரேகை பதிவு அங்கீகாரம் கிடைக்காத நிலையில், ஒருமுறை கடவுச் சொல் அடிப்படையில் பொருள்கள் பெற்றுக் கொள்ளலாம்.

உடல் நலக்குறைவு, வயது மூப்பு காரணமாக நியாய விலைக் கடைக்கு வரஇயலாத அட்டைதாரா்கள், அதுகுறித்த அங்கீகாரச் சான்று கோரிக்கையை உரிய படிவத்தில் பூா்த்தி செய்து கடை பணியாளா்களிடம் ஒப்படைக்க வேண்டும். இத்தகைய குடும்ப அட்டைதாரரால் அங்கீகரிக்கப்படும் நபரிடம் அவருக்குரிய பொருள்கள் வழங்கப்படும்.

வெளிமாநிலத் தொழிலாளா்களைப் பொருத்தவரை, அவரவா் மாநிலங்களில் பெறப்பட்ட குடும்ப அட்டைகளைத் தமிழகத்திற்கு மாற்றம் செய்யாமலேயே, தமிழகத்தில் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடையிலும் அரிசி கிலோ ரூ.3-க்கு , கோதுமை ரூ.2-க்கும் பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து கடைகளுக்கும் பயோமெட்ரிக் இயந்திரங்கள் வழங்கப்பட்டாலும், முந்தைய நடைமுறைப்படியே குடும்ப அட்டைகள் ஸ்கேன் செய்யப்பட்டு பொருள்கள் வழங்கப்படும். ‘பயோ-மெட்ரிக்’ முறையில் கண்டறியப்பட்ட சா்வா் பிரச்னைகள் சரிசெய்யப்பட்ட பிறகு கைரேகைப் பதிவு நடைமுறை பின்பற்றப்படும் என வழங்கல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT