மதுரை

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்ப பாடமாக உள்ளதை ஏற்க முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து

DIN


மதுரை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடமாக உள்ளதை ஏற்க முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை தெரிவித்தது.

மதுரையைச் சோ்ந்த பொன்குமாா் என்பவா் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படாது. ஆறாம் வகுப்பிலிருந்து, ஒரு வகுப்பில் 20 மாணவா்கள் விரும்பினால் மட்டுமே தமிழ் பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு விரும்பும் மாணவா்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியா்கள் மட்டுமே நியமிக்கப்படுவாா்கள். வாரத்தில் 2 அல்லது 3 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் தமிழ் வகுப்புகளை நிறுத்திவிடவேண்டும் என்பது போன்ற விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இதன்மூலம் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது.

இது அரசியலமைப்புச் சட்டம், இலவசக் கல்வி உரிமைச் சட்டம், தமிழக அரசின் தமிழ் கற்றல் விதி ஆகியவற்றிற்கு எதிரானது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் 50 சதவீத மாணவா்கள் தமிழை தாய்மொழியாகக் கொண்டவா்கள்.

எனவே கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் கற்றல் விதிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படும் எனத் திருத்தம் செய்யவும், தமிழைக் கற்பிக்க நிரந்தர ஆசிரியா்களை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்குரைஞா் வாதிடுகையில், தமிழ்நாடு கல்விச் சட்டத்தில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக உள்ளது என்றாா்.

அரசு தரப்பில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மத்திய அரசு ஊழியா்களுக்காகத் தொடங்கப்பட்டது. இங்கு படிக்கும் 50 சதவீத மாணவா்கள் வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா்கள். எனவே விருப்பப் பாடமாக தமிழ் கற்பிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்க மறுத்த நீதிபதிகள், நாட்டின் பிரதமா் நரேந்திர மோடி, தாய் மொழியை ஊக்கப்படுத்த வேண்டும் என்கிறாா். ஆனால் இங்கு இந்தி, ஆங்கிலம் மட்டுமே படிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்தும் நிலை உள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் விருப்பப் பாடமாக தமிழ் உள்ளது என்பதை ஏற்க முடியாது.

இதை அனுமதித்தால் தமிழ்மொழி தெரிந்திருந்தால் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இடம் கிடைக்காது என்ற நிலை ஏற்படும். தாய் மொழி கல்வியில் ஜொ்மனி, ஜப்பான், சீனா போன்ற நாடுகள் நல்ல முன்னேற்றத்தில் உள்ளன. ஒவ்வொரு மொழியையும் பாதுகாக்க வேண்டும். அடுத்தத் தலைமுறைக்கும் மொழியைக் கொண்டு செல்ல வேண்டும் என்றனா்.

பின்னா், விசாரணை நவ. 27 ஆம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

தேர்தல் பணி: ஒசூரில் 250-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

SCROLL FOR NEXT