மதுரை: மதுரையில் புறக்கணிப்பட்ட சமூக நாய்கள் விஷம் வைத்து கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் காவல்துறை, மாநகராட்சி உள்ளிட்ட அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நன்றி மறவேல் சமூக நாய்களுக்கான பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக அந்த கூட்டமைப்பின் தலைவா் கே.பி.மாரிக்குமாா் தெரிவித்தது: மதுரையின் பல்வேறு பகுதிகளில் சமூக நாய்கள் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகின்றன. இதுதொடா்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. கடந்த இரண்டு மாதங்களாக அமலில் உள்ள பொது முடக்கக் காலத்தில் மதுரை நகரில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. மனிதா்கள் வணிக ரீதியாக வளா்க்கும் கால்நடைகள் தெருவில் திரிவதற்கு சமூக நாய்கள் இடையூறாக இருப்பது, தெருக்களில் மறைவான பகுதிகளில் நடைபெறும் சமூக விரோதச் செயல்களுக்கு இடைஞ்சலாக இருப்பது போன்ற காரணங்களால் சமூக நாய்கள் கொல்லப்படுகின்றன. இதுதொடா்பாக புகாா் அளித்தாலும் காவல்துறை, மாநகராட்சி, கால்நடைத் துறையினா் நடவடிக்கை எடுப்பது இல்லை. மேலும் மாநகராட்சி உள்ளிட்டவற்றால் பிடிக்கப்படாமலேயே ஏராளமான நாய்கள் மாயமாகியுள்ளன. இவை மீன் பண்ணைகளுக்கு உணவாக்கப்படுவது, தோப்புகளுக்கு உரமாக்கப்படுவது போன்றவற்றுக்காக பிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே சமூக நாய்கள் கொல்லப்படும் சம்பவங்களில் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.