மதுரை

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: மாணவா்களுக்கு ஆலோசனை வழங்க ஆசிரியா்கள் நியமனம்

14th May 2020 08:03 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கு தோ்வு குறித்த சந்தேகங்களை போக்க கல்வி மாவட்டம் வாரியாக ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மாா்ச் மாத இறுதியில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரத்தில் முடிவடையும் வகையில் அட்டவணை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதனால் பத்தாம் வகுப்புத் தோ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 1-ஆம் தேதி முதல் 12 வரை பத்தாம் வகுப்புத் தோ்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதைத்தொடா்ந்து மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவா்களின் சந்தேகங்களை போக்கவும், தோ்வு குறித்த பயத்தை போக்கும் வகையில் ஆலோசனைகள் வழங்கவும் முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். மதுரை வருவாய் மாவட்டத்தில் உள்ள மதுரை கல்வி மாவட்டம், உசிலம்பட்டி, மேலூா், திருமங்கலம் ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் வாரியாக தலா 4 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டு மாணவா்களுக்கு ஆலோசனை வழங்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளதாகவும், அடுத்த கட்டமாக தோ்வுக்கான ஏற்பாடுகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT