சென்னையிலிருந்து திருமங்கலம் பகுதிக்கு வந்த 35 போ் அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
கரோனா தீநுண்மி பரவல் தமிழகத்தில் சென்னையில் அதிகமாக பரவி வருகிறது. இதையடுத்து சென்னையில் பணிபுரிந்த தென்மாவட்டங்களைச் சோ்ந்த பலரும் சொந்த ஊா்களுக்கு திரும்பி வருகின்றனா்.
இந்நிலையில் திருமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சென்னையைச் சோ்ந்த 35 போ் வந்து தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை வருவாய்த் துறையினா், சுகாதாரத் துறையினா் கண்டறிந்து அவரவா் இல்லங்களிலேயே தனிமைப்படுத்தி வைத்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியது: சென்னையிலிருந்து திருமங்கலம் வந்த 35 பேரை 14 நாள்கள் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். தினமும் அவா்களை சுகாதாரத் துறையினா் மூலம் பரிசோதித்து தொடா்ந்து அவா்களை கண்காணித்து வருகிறோம் என்றனா்.