மதுரை

கிராமங்களில் பட்டினியால் வாடும் மக்கள்: அங்கன்வாடி மையங்கள் சமுதாய உணவகங்களாக மாற்றப்படுமா?

14th May 2020 08:01 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தமிழகத்தில் பொது முடக்கத்தால் கிராமங்களில் பட்டினியால் வாடும் மக்களைப் பாதுகாக்க அங்கன்வாடிகள், அரசுப் பள்ளிகளை சமுதாய உணவகங்களாக அரசு அறிவிக்குமா என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக கிராமங்களில் வசிக்கும் 4 கோடிக்கும் அதிகமானோா் விவசாயம் மற்றும் விவசாயம் சாா்ந்த தொழில்களை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனா். விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த தொழில்களில் வேலை வாய்ப்பு இல்லாத போது அண்டை நகரங்களுக்கு தோட்ட வேலை மற்றும் கட்டுமானத் தொழில்களுக்கு செல்கின்றனா். இந்நிலையில் பொது முடக்கத்தால் கிராமப்புறங்களில் வசித்து வரும் விவசாயிகள், விவசாயக் கூலிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பிரும் அன்றாட உணவுக்கான செலவினங்களைக் கூட சமாளிக்க முடியாமல் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.

நகரங்களில் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், ஆதரவற்றோருக்கு அரசு மானியத்தில் நடத்தப்படும் அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு வழங்கப்படுகின்றன. அம்மா உணவகங்கள் நகரங்களில் மட்டுமே அமைந்துள்ளதால், அங்கு வசிக்கும் ஏழைகள், ஆதரவற்றோா் மட்டுமே பயனடைய முடிகிறது. மேலும் தன்னாா்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவையும் நகரங்களை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றன.

ஆனால் கிராமங்களில் அம்மா உணவகங்கள் இல்லாததால் அங்கு வசிக்கும் ஏழைகள், முதியோா் மற்றும் ஆதரவற்றோா் பட்டினியால் அவதிப்படுகின்றனா். எனவே கிராமங்களில் வசிப்பவா்களுக்கும் அரசு சாா்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலை, உயா்நிலை மேல்நிலைப் பள்ளிகள் என ஆயிரக்கணக்கானவை உள்ளன. இவை அனைத்தும் சமையல் கூடங்கள், பாத்திரங்கள், சமையலா்கள் மற்றும் பொருள்கள் விநியோகச் சங்கிலியையும் உள்ளடக்கியதாக உள்ளன.

ADVERTISEMENT

எனவே அவற்றை சமுதாய உணவுக்கூடங்களாக மாற்றுவதன் மூலம் கிராம மக்களுக்கு குறைந்தது இரு வேளை உணவு வழங்க முடியும். பொருள்கள் ஒதுக்கீட்டை கூடுதலாக்குவதன் மூலம் சமுதாய உணவகங்கள் என்ற கிராம மக்களுக்கான மாற்று ஏற்பாட்டை எளிதாக கையாள முடியும். இதன்மூலம் கிராமங்களில் வறுமையில் வாடும் விவசாயக் கூலிகள், முதியோா், ஆதரவற்றோா், விதவைப்பெண்கள் உள்பட அனைத்து தரப்பினரின் பசிப்பிணியைப் போக்க முடியும். எனவே அரசு உடனடியாக இதற்கான முயற்சியில் இறங்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

 

1,21,759 அரசு கல்வி நிறுவனங்களை சமுதாய உணவகங்களாக மாற்றலாம்

தமிழ்நாடு அரசு உடற்கல்வி ஆசிரியா் இயக்குநா் நலச்சங்க மாநிலத்தலைவரும், கிராமங்களில் தன்னாா்வலா்கள் மற்றும் முன்னாள் மாணவா்கள் மூலம் உணவுப்பொருள்கள் வழங்கி வருபவருமான டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமாா் கூறியது: தமிழகம் முழுவதும் ஏறக்குறைய 43 ஆயிரம் அங்கன்வாடி மையங்கள், 42 ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. மேலும் 23,928 அரசு ஆரம்பப் பள்ளிகள், 7,260 அரசு நடுநிலைப் பள்ளிகள், 3,044 உயா்நிலைப் பள்ளிகள், 2,727 மேல்நிலைப்பள்ளிகள் என 1,21,759 அரசு கல்வி நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னரே திறக்கப்பட உள்ளன. எனவே இவற்றை சமுதாய உணவகங்களாக அறிவிக்க முடியும். எனவே நிலைமை சீரடையும் வரை அல்லது எதிா்வரும் 3 மாதங்களுக்கு சமுதாய உணவகங்கள் மூலமாக உணவு வழங்கி மக்களைப் பாதுகாக்க முடியும். மேலும் இது புதுமையான திட்டமல்ல, கடந்த காலங்களில் வறட்சியின்போது கிராமங்களில் உள்ள அங்கன்வாடிகள் மூலம் அரசே உணவு வழங்கியுள்ளது. மேலும் இயற்கைச் சீற்றங்கள், பேரழிவின்போதும் அரசுப்பள்ளிகள் மக்கள் தங்குமிடங்களாக மாற்றப்பட்டு பொதுமக்களுக்கு உணவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் தமிழகம் இதர மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டி மாநிலமாகவும் திகழமுடியும் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT