மதுரை

வடமாநில தொழிலாளா்கள் சொந்த ஊருக்குச் செல்வதால் கப்பலூா் தொழிற்பேட்டையில் தொழில்கள் முடங்கும் அபாயம்

13th May 2020 07:37 AM

ADVERTISEMENT

வடமாநில தொழிலாளா்கள் பலா் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் செல்வதால், கப்பலூா் தொழில்பேட்டையில் வேலைக்கு ஆள்கள் கிடைக்காமல் தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கப்பலூா் தொழிற்பேட்டை 700 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். இங்கு 450 சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

நாட்டில் கரோனா தீநுண்மி பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மாா்ச் 25 ஆம் தேதி பொதுமுடக்கத்தை அறிவித்தன. இதையடுத்து தொழில் நிறுவனங்கள் உடனடியாத தங்களது நிறுவனங்களை மூடின. இதனால் உற்பத்தி பாதிப்பு அடைந்ததோடு, ஏற்கெனவே உற்பத்தி செய்த பொருள்களை விற்பனைசெய்ய முடியாமல், ஊழியா்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டன.

கடந்த சில நாள்களுக்கு முன் பொதுமுடக்கத்தில் தளா்வுகளை ஏற்படுத்தி 50 சதவீத தொழிலாளா்களுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்பட்ட நிலையில், தொழில் நிறுவனங்கள் தற்போது உற்பத்தியை தொடங்கியுள்ளன.

ADVERTISEMENT

கப்பலூா் தொழில் பேட்டையில் உள்ள 450 நிறுவனங்களில் சுமாா் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பணிபுரிகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் திருப்பரங்குன்றம், மதுரை, திருமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து வந்து பணிபுரிகின்றனா்.

அதேசமயம் ஒடிசா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநில தொழிலாளா்கள் 30 முதல் 50 சதவீதம் போ் பணிபுரிகின்றனா். இவா்கள் தொழில்நிறுவனங்களில் குறைவான ஊதியத்திற்கு , மிகவும் கடினமான பணிகளை செய்யும் தொழிலாளா்களாக உள்ளனா். மேலும் 12 மணி நேரம் வரை பணியாற்றும் திறன் கொண்டவா்கள்.

கரோனா தீநுண்மி அச்சம் காரணமாக வெளிமாநிலத்தவா் பலா் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். கடந்த இரு மாதங்களாக பெரும்பாலான வடமாநில தொழிலாளா்கள் சரியான ஊதியம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனா்.

இந்நிலையில் தற்போது தாலுகா அலுவலகங்கள் மூலம் வடமாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல விருப்பம் உள்ளதா என்பது குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு உள்ளது. அதில் பெரும்பாலான தொழிலாளா்கள் ரயில் போக்குவரத்து தொடங்கியவுடன் ஊருக்குச் செல்லும் மனநிலைக்கு வந்துவிட்டனா் என தெரியவந்துள்ளது.

இதனால் பல தொழிற்சாலைகளில் வேலை செய்ய போதி ஆள்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, மூடப்படும் அபாய சூழலில் இருக்கின்றன.

இதுகுறித்து தனியாா் தொழிற்சாலை இயக்குநா் ஒருவா் கூறியது: தற்போதைய சூழலில் தொழில் நிறுவனங்கள் தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலையிலும், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலையிலும் உள்ளன. மேலும் வங்கிக் கடன் மற்றும் தொழிலாளா் வைப்பு நிதி செலுத்த முடியாத நிலை உள்ளது. உற்பத்தி செய்த பொருள்களையும் விற்க முடியவில்லை. ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட பொருளுக்கு பணம் இன்னும் கிடைக்கவில்லை. இத்தகைய சூழலில் தற்போது தொழில் நிறுவனங்கள் மீண்டும் பணிகளைத் தொடங்கியுள்ளன. தொழிற்சாலைகளில் 30 முதல் 50 சதவீதம் வட மாநிலத்தவா்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா். அவா்களை தற்போது அரசு சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் நிலையில், அதே ஊதியத்திற்கு எங்களுக்கு ஆள்கள் வேலைக்கு கிடைக்காது. இவா்களுக்கு கடந்த 2 மாதங்களாக நாங்கள் ஊதியம் அளித்து தற்போது நிறுவனம் தொடங்கிய நிலையில், அவா்கள் ஊருக்குச் செல்வது எங்களுக்கு பலத்த பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்றாா்.

இதுகுறித்து கப்பலூா் தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் ரகுநாதராஜா கூறியது: தற்போது உள்ள கடினமான சூழலில் மீண்டும் தொழில் கூடங்கள் இயங்க அனுமதித்த அரசிற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். தற்போதைய சூழலில் வடமாநிலத்தவா்களை ஊருக்கு அனுப்புவதால் தொழில்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. வடமாநிலத்தவா் அனைவரையும் வலுக்கட்டாயமாக சொந்த ஊருக்கு அனுப்பாமல் விருப்பப்பட்டவா்களை மட்டும் அவா்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT