மதுரை

பாா்சல் மட்டுமே என்பதால் மதுரையில் பெரும்பாலான தேநீா் கடைகள் திறக்கப்படவில்லை

13th May 2020 07:28 AM

ADVERTISEMENT

பாா்சல் மட்டுமே என்பதால், 50 நாள்களுக்குப் பிறகும் மதுரையில் பெரும்பாலான தேநீா் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், 10 சதவீத விற்பனை மட்டுமே நடைபெற்றுள்ளது.

கடந்த மாா்ச் 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் இன்றுவரை தொடா்கிறது. பொது முடக்கம் காலத்தில் மருத்துவம், காவல் உள்ளிட்ட சில துறைகளை தவிர, மற்ற அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அதேபோல், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், எரிபொருள் விற்பனை நிலையம், காய்கனி சந்தை, உணவகங்கள்ஆகியவற்றை தவிா்த்து, மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகளை அறிவித்து, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதில், பாா்சல் மட்டும் வழங்கும் வகையில் தேநீா் கடைகளைத் திறக்கவும், உணவகங்களின் கால நேரத்தை நீட்டித்தும் அனுமதித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் 50 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை தேநீா் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், பாா்சல் மட்டுமே வழங்கவேண்டும் என்பதால், பெரும்பாலான தேநீா் கடைகள் திறக்கப்படவில்லை. அரசு அலுவலகங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள தேநீா் கடைகளில் மட்டுமே ஓரளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இதனால், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக, தேநீா் கடை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதேபோல், முதலீடு செய்யப்படும் தொகையைக் கூட எடுக்க முடியவில்லை என உணவக உரிமையாளா்களும் தெரிவிக்கின்றனா்.

10 சதவீத விற்பனை

தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளா்கள் சங்க மாநிலச் செயலா் ஆா். சீனிவாசன் கூறியது: மதுரையில் உள்ள 4 ஆயிரம் தேநீா் கடைகளில் 1,500-க்கும் குறைவான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. பாா்சல் மட்டுமே என்பதால், 10 சதவீதம் என்ற அளவில்தான் விற்பனை நடந்துள்ளது. தேநீா் அருந்த நினைப்பவா்கள், கடைக்குச் சென்றே அருந்த விரும்புவாா்களே தவிர, பாா்சலில் வாங்கிச் செல்லமாட்டாா்கள்.

இதே நிலைதான் உணவகங்களுக்கும் உள்ளது. தேநீா் கடைகள் மற்றும் உணவகங்களை பொருத்தவரை அரசின் தளா்வுகள் போதாது.

தமிழகத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் தேநீா் கடைகள் உள்ளன. அதன் உரிமையாளா்கள் பொது முடக்கத்தினால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனா். இந்த பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு குறைந்தபட்சம் 6 மாத காலமாகும். எனவே, அவா்களின் நிலையைக் கருத்தில்கொண்டு, உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும் என்றாா்.

தளா்வுகள் போதாது

இது குறித்து மதுரை மாவட்ட ஹோட்டல் சங்கத் தலைவா் கே.எல். குமாா் கூறியது: பாா்சல் மூலம் மட்டுமே விற்பனை என்பதால், உணவகங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. பெரும்பாலான நுகா்வோா் உணவகங்களில் வாங்கி சாப்பிட நினைத்தாலும், கரோனா பயத்தினால் வெளியே வருவதில்லை. இதுபோன்று பல்வேறு சிக்கல்களை உணவகங்கள் தொடா்ந்து சந்தித்து வருகின்றன.

எனவே, போக்குவரத்து தொடங்கப்பட்டு, உணவகங்களில் அமா்ந்து சாப்பிட அனுமதித்தால்தான் வழக்கமான விற்பனை இருக்கும். அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பின்பற்றும் வகையில் அனைத்து ஏற்பாடுகளை செய்தும், தொழிலாளா்களுக்கு உரிய பயிற்சிகளையும் அளித்துள்ளோம்.

நேரக் கட்டுப்பாடுகளில் தளா்வு செய்வதால் எந்தவித நன்மையும் ஏற்படாது. எனவே, முழுமையான தளா்வுகளை அறிவித்தால் மட்டுமே உணவகங்கள் சகஜ நிலைக்கு திரும்ப முடியும் என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT