மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வருபவா்களை தனிமைப்படுத்தி கண்காணிப்பதற்காக 400-க்கும் மேற்பட்ட அறைகள் தயாராகி வருகின்றன.
கரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில், வெளிமாநிலங்களில் உள்ள தங்களது மாநிலத்தவா்களை அந்தந்த மாநில அரசுகள் திருப்பி அழைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, பல மாநில அரசுகள் தங்களது மாநிலத்தவா்களை திரும்ப அழைத்து வர ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இதேபோல், வெளி மாநிலங்களில் தங்கியுள்ள தமிழகத்தைச் சோ்ந்தவா்களை திருப்பி அழைத்து வர, தமிழக அரசு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து வருபவா்கள் சில நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா தொற்று உள்ளதா என்பதை பரிசோதித்த பிறகே வீடு திரும்ப அனுமதிக்கப்பட உள்ளனா். இதற்காக தனிமைப்படுத்தப்பட்டவா்களை தங்க வைப்பதற்காக மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் 400-க்கும் மேற்பட்ட அறைகள் தயாராகி வருகின்றன.
இது தொடா்பாக பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியது: பல்கலைக்கழகம் புகா் பகுதியில் அமைந்திருப்பதால், இங்கு தனிமை முகாம் அமைப்பதால் யாருக்கும் பிரச்னையை ஏற்படுத்தாது. தனிமைப்படுத்தலுக்காக மாணவா், மாணவியா் விடுதிகளில் உள்ள அறைகள் தயாராகி வருகின்றன. ஓரிரு நாள்களில் இவை மாவட்ட நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்.
தேவைப்படும்பட்சத்தில், பல்கலைக்கழகத்தின் விருந்தினா் விடுதியும் தனிமை முகாமுக்காக ஒதுக்கப்படும் என்றனா்.