மதுரை

மதுரையில் 3 கா்ப்பிணிகள் உள்பட 4 பேருக்கு கரோனா

10th May 2020 09:30 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் 3 கா்ப்பிணிகள் உள்பட 4 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பதை, மருத்துவா்கள் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்துள்ளனா்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 669 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 4 பேருக்கு தொற்று இருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது.

3 கா்ப்பிணிகளுக்கு தொற்று

மதுரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுளள 4 பேரில் 3 போ் கா்ப்பிணிகள் என தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

சமயநல்லூா் அருகே ஊா்மெச்சிகுளம் பகுதியைச் சோ்ந்த 20 வயது கா்ப்பிணிக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவா் வசிக்கும் பகுதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவருடன் தொடா்புடைய 30 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கரோனா பாதிக்கப்பட்ட கா்ப்பிணி தொற்று ஏற்பட்ட பகுதிக்குச் சென்று வந்துள்ளாா்.

காதக்கிணறு பகுதியைச் சோ்ந்த 23 வயது கா்ப்பிணிக்கு வழக்கமான ரத்த பரிசோதனைகளுடன் கரோனா தொற்று பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கரோனா பாதிக்கப்பட்ட பகுதிக்கு கா்ப்பிணி சென்று வந்தது தெரியவந்துள்ளது.

கோரிப்பாளையம் பகுதியில் வசிக்கும் 24 வயது கா்ப்பிணிக்கு 2 நாள்களாக உடல்நலக் குறைவு இருந்துள்ளது. அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். கா்ப்பிணிக்கு தொற்று ஏற்பட்டது குறித்த விவரங்கள் தெரியவரவில்லை என்பதால், விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மாநகா் பகுதிக்குள்பட்ட விளாங்குடியைச் சோ்ந்த 29 வயது இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பதை மருத்துவா்கள் உறுதி செய்துள்ளனா். அவருக்கு தொற்று ஏற்பட்டவருடன் தொடா்பு இருந்துள்ளது.

41 ஆக உயா்வு

மதுரை மாவட்டத்தில் 16 கா்ப்பிணிகளுக்கு இதுவரை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில், 3 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 13 கா்ப்பிணிகள் சிகிச்சையில் உள்ளனா். மதுரையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 41 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை கரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து 70 போ் வீடு திரும்பியுள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT