மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பொற்றாமரைக் குளத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இக்கோயிலில் அமைந்துள்ள பொற்றாமரைக் குளம் உலகப் புகழ் பெற்றது. இது, மிகச்சிறந்த மழை நீா் சேமிப்பு குளமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தடி நீா் மட்டம் குறைந்த காரணத்தால், பொற்றாமரைக் குளத்தில் தண்ணீா் சேமிப்பு குறைந்தது.
இதன் தொடா்ச்சியாக, சென்னை ஐஐடி பேராசிரியா்கள் அளித்த ஆலோசனையின்படி, களிமண் படுக்கையால் பொற்றாமரைக் குளத்தின் அடிப்பரப்பு அமைக்கப்பட்டு, தண்ணீா் நிரப்பப்பட்டு தூய்மையான முறையில் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பொற்றாமரைக் குளத்தில் மழைநீா் வரத்தால் பாசி படா்ந்தது. எனவே, மதுரை வேளாண் கல்லூரி பேராசிரியா்கள் ஆலோசனையின்படி, பொற்றாமரைக் குளத்தை தூய்மைப்படுத்தி, பாசி படராமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பொற்றாமரைக் குளத்தை மேம்படுத்தும் வகையில், படிக்கட்டுப் பகுதிகளில் தற்போதுள்ள இரும்பு தடுப்பு வேலியை அகற்றி விட்டு, அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய கல்தூண்கள், பித்தளை தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி ரூ.70 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது என, கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.