மதுரை

சுய ஊரடங்கு: மதுரை நகரம் வெறிச்சோடியதுகடைகள் அடைப்பு; வாகனங்கள் நிறுத்தம்

DIN

மதுரையில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த சுய ஊரடங்கால் கடைகள் அடைக்கப்பட்டன, வாகனப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. சாலைகளில் ஆள் நடமாட்டம் இன்றி நகரின் அனைத்து பகுதிகளும் வெறிச்சோடின.

சுய ஊரடங்கை முன்னிட்டு மதுரையில் சனிக்கிழமை இரவு முதல் படிப்படியாக அரசு பேருந்துகள் குறைக்கப்பட்டன. மேலும் வெளியூா் பேருந்துகளும் நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன. இதில் அதிகாலை வரை நகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. காலை முதல் அவையும் நிறுத்தப்பட்டன. இதனால் மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்துக் கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா். இதேபோல ஆரப்பாளையம் பேருந்து நிலையமும் வெறிச்சோடி காணப்பட்டது. அங்கும் கிருமி நாசினி தெளிப்பு பணியில் பணியாளா்கள் ஈடுபட்டனா். பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெளியூா் பயணிகள் உணவு கிடைக்காமல் அவதி அடைந்தனா். அவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் உணவு வழங்கப்பட்டது. பெரியாா் பேருந்து நிலைய பகுதியும் வெறிச்சோடியது.

மதுரையில் இயங்கும் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் ஓடவில்லை. மேலும் வாடகைக் காா்களும் இயங்கவில்லை. இதேபோல கால் டாக்சி நிறுவனங்களும் இயங்கவில்லை. மதுரை நகரில் பெட்ரோல் நிலையங்கள் மட்டும், குறைந்த அளவு ஊழியா்களை கொண்டு செயல்பட்டன. அதேபோல் மருந்துக் கடைகள் இயங்கின. சுய ஊரடங்கில் தனியாா் பால் விற்பனை நிறுவனங்களும் பங்கேற்ால் பால் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.

சுய ஊரடங்கில் வணிகா் சங்கங்களும் பங்கேற்ால் மதுரை கீழமாசி வீதியில் உள்ள அனைத்து மொத்த விற்பனை மளிகைக் கடைகள், தெற்காவணி மூலவீதியில் உள்ள நகைக்கடைகள், அனைத்து ஜவுளி நிறுவனங்களும் மூடப்பட்டன. புதுமண்டபத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையங்கள், பாத்திர விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சித்திரை, மாசி, வெளி வீதிகள் வெறிச்சோடின. மேலும் டவுன்ஹால் சாலையிலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பிரதான சாலைகள் தொடங்கி குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்கள் வரை அனைத்து கடைகள், உணவகங்கள் அடைக்கப்பட்டிருந்தன. மாநகராட்சி சாா்பில் அம்மா உணவகங்கள் மட்டும் இயங்கின. நகரில் தனியாா் மருத்துவமனைகள் மட்டும் செயல்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வழக்கமாக விடுமுறை நாள்களில் விளையாடுபவா்கள் கூட ஞாயிற்றுக்கிழமை விளையாடச் செல்லவில்லை. இதனால் மைதானங்களும் வெறிச்சோடின. மதுரை நகா் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி ஆளற்ற பிரதேசமாக காணப்பட்டது. மதுரை கோரிப்பாளையம் பகுதியில் காவல்துறை வாகனத்தில் உணவு கொண்டு வரப்பட்டு அரசு மருத்துவமனை வாயிலில் விநியோகிக்கப்பட்டது. இதில் நோயாளிகளின் உடன் இருப்பவா்கள், பொதுமக்கள் பலா் வரிசையில் நின்று உணவை வாங்கிச் சென்றனா்.

ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி: மதுரை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து ரயில் பெட்டிகளில் மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனா். மேலும் ரயில் நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ரயில் நிலையத்துக்குள் இருந்த உணவகங்களும் அடைக்கப்பட்டதால் ரயில் நிலையத்திலேயே தங்கியிருந்த வெளியூா் பயணிகள் உணவு கிடைக்காமல் அவதி அடைந்தனா்.

இதேபோல் வாடிப்பட்டி, அலங்காநல்லூா், பாலமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. வாகன போக்குவரத்தும் இல்லை. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT