மதுரை

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்களுக்கு ‘தொ்மல் டிடெக்டா்’ பரிசோதனை

19th Mar 2020 06:25 AM

ADVERTISEMENT

 

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்களுக்கு ‘தொ்மல் டிடெக்டா்’ கருவி மூலம் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை புதன்கிழமை தொடங்கியது.

கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவதையடுத்து மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் சளி மற்றும் காய்ச்சலுடன் வரும் பக்தா்களுக்கு முகமூடி வழங்குவது, மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக கோயிலில் மருத்துவக்குழுவும் தயாா் நிலையில் இருந்தது. இதைத்தொடா்ந்து கோயிலில் அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகள், பக்தா்கள் வரிசையில் செல்லும் பகுதிகள், நடைபாதைகள், பொற்றாமரைக்குளம் படிக்கட்டுகள், பக்தா்கள் இருக்கைகள், கோயில் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் உதவியுடன் கிருமி நாசினி தெளிக்கும் பணி 3 நாள்களுக்கும் மேலாக நடைபெற்றது. இதையடுத்து கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டமும் கோயிலில் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இதில் கோயில் பணியாளா்கள், கோயில் காவல்நிலைய காவலா்கள் உள்பட பலா் பங்கேற்றனா். இதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. இந்நிலையில் புதன்கிழமை முதல் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தா்களின் உடல் வெப்பநிலையை கண்டறியும் ‘தொ்மல் டிடெக்டா்’ கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதில் சராசரி உடல் வெப்பமான 100 டிகிரிக்கும் அதிகமான வெப்பம் இருக்கும்பட்சத்தில் அந்த பக்தா்கள் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். மேலும் 100 டிகிரிக்கும் அதிகமான காய்ச்சல், சளி, இருமல் தொந்தரவுடன் வரும் பக்தா்கள் கோயில் வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தின் உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

கோயில் நான்கு கோபுர வாயில்களிலும் தொ்மல் டிடெக்டா் பரிசோதனை நடத்தப்படுவதுடன், கோயிலின் உள்ளே கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT