மதுரை

நான்கு மாசி வீதிகளில் சாலை சீரமைப்புப் பணிகளை சித்திரை திருவிழா தொடங்குவதற்குள் முடிக்க உத்தரவு

6th Mar 2020 07:32 AM

ADVERTISEMENT

மதுரையில் நான்கு மாசிவீதிகளில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்புப் பணிகளை சித்திரை திருவிழா தொடங்குவதற்குள் முடிக்குமாறு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சீா்மிகு நகா்த்திட்டத்தின்கீழ் பல்வேறு வளா்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏப்ரல் மாதத்தில் சித்திரைத் திருவிழா தொடங்க உள்ளதால் மீனாட்சியம்மன் கோயில் சாா்பில் தோ் பவனி நடைபெறும். எனவே மாசி வீதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இதையடுத்து கீழ மாசி வீதி, மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி ஆகிய நான்கு மாசி வீதிகளிலும் சாலை சீரமைப்பு பணி, 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் வகையில் குடிநீா் குழாய் அமைக்கும் பணிகள், அலங்கார நடைபாதை அமைக்கும் பணிகள், மழைநீா் வடிகால் அமைத்தல், தரைவழி மின் கம்பிகள் செல்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல் மற்றும் பாதாளச் சாக்கடை அமைப்பினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் சாலைகளில் உள்ள மண் குவியல்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றும்படி உத்தரவிட்டாா்.

இதையடுத்து நான்கு உதவி செயற்பொறியாளா்கள் தலைமையில் பொறியாளா்கள் குழு, நான்கு சுகாதார அலுவலா்கள் தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள், 200 சுகாதாரப் பணியாளா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு சாலைகளில் உள்ள மண் குவியல்கள், இடிபாடுகளை அகற்றுதல், பாதாளச் சாக்கடை அடைப்புக்களை சரிசெய்தல் மற்றும் நான்கு மாசி வீதிகளில் சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் உடன் ஒருங்கிணைந்து சுத்தம் செய்யும் பணி நள்ளிரவு முதல் நடைபெற்று வருகிறது. மேலும் சித்திரை திருவிழா தொடங்குவதற்குள் அனைத்துப்பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT