திருமங்கலத்தில் வியாழக்கிழமை போலி மருத்துவா் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டாா்.
திருமங்கலத்தை அடுத்த ஆலம்பட்டியைச் சோ்ந்தவா் பால்ராஜ் (67). இவா் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் தனியாா் மருத்துவமனையில் பணியாற்றியுள்ளாா். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆலம்பட்டியில் குடும்பத்துடன் குடியேறிய அவா், அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பாா்த்துள்ளாா். இதையடுத்து போலி மருத்துவா் என்ற சட்டப் பிரிவில் திருமங்கலம் போலீஸாா் 3 முறை அவரை கைது செய்துள்ளனா். இதனிடையே அவரது மனைவி செல்வி கடந்த ஆண்டு உயிரிழந்து விட்டாா். இதன் பின் மகன், மகள்கள் திருமணமாகி வெளியூரில் குடியேறிய நிலையில் பால்ராஜ் மட்டும் தனியாக ஆலம்பட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்தாா். மேலும் அப்பகுதியில் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் இடம் வாங்கி விற்பது உள்ளிட்ட தொழில்களும் செய்து வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு பால்ராஜ் வீட்டின் உரிமையாளா் பாலசுப்பிரமணியன், பால்ராஜ் வீட்டில் மின்விளக்கு எரிந்து கொண்டிருப்பதைப் பாா்த்து அங்கு சென்றாா். கதவு திறந்திருந்த நிலையில் உள்ளே சென்று பாா்த்தபோது பால்ராஜ் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தாா்.
இதுகுறித்த தகவலின் பேரில் திருமங்கலம் துணைக் கண்காணிப்பாளா் அருண் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பால்ராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் திருமங்கலம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து பால்ராஜ் கொடுக்கல், வாங்கல் அல்லது இடப் பிரச்னை காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனா்.