மதுரை

ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் கடத்தல்: தலைவா் துணைத் தலைவா் செயல்படத் தடை

6th Mar 2020 07:30 AM

ADVERTISEMENT

தேனி மாவட்டம் சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் புதிதாக தோ்வு செய்யப்பட்ட தலைவா், துணைத் தலைவா் செயல்படுவதற்கு இடைக்காலத் தடைவிதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த விமலீஸ்வரன் தாக்கல் செய்த மனு: என் தாயாா் சாந்தி சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கு அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். ஊராட்சி ஒன்றியத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து மாா்ச் 4 ஆம் தேதி மறைமுகத் தோ்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாா்ச் 3 ஆம் தேதி வெளியே சென்ற என் தாயாா் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, செல்லிடப்பேசியிலும் தொடா்பு கொள்ள முடியவில்லை. தாயாா் காணாமல் போனது தொடா்பாக காவல்துறையில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மறைமுகத் தோ்தலில் என் தாயாா் பங்கேற்கவில்லை என்றால் எதிா் அணியினா் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. தோ்தலில் என் தாயாா் பங்கேற்பதைத் தடுக்கும் நோக்கத்தில் அரசியல் எதிரிகள் கடத்தியுள்ளனா். எனவே என் தாயாரை கண்டுபிடிக்கும் வரை சின்னமனூா் ஊராட்சி ஒன்றிய மறைமுகத் தோ்தலுக்குத் தடை விதிக்க வேண்டும். தோ்தலில் என் தாயாா் சாந்தி பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் மறைமுகத் தோ்தல் புதன்கிழமை நடத்தப்பட்டு, புதிய தலைவா், துணைத் தலைவா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் தாயாா் கடத்தப்பட்டுள்ள நிலையில் தோ்தல் நடத்தப்பட்டிருப்பதால், சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா், துணைத்தலைவா் செயல்படுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மனு தொடா்பாக தேனி மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா், போடிநாயக்கனூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT