மதுரை

மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்டம் நிறைவேறுமா?

14th Jun 2020 08:21 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பொது முடக்கம் காரணமாக, மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்டம் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரையில் ஜப்பான் கூட்டுறவு நிதி நிறுவனம் (ஜைக்கா) உதவியுடன் தோப்பூரில் 263 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் 26 அறுவைச் சிகிச்சை அரங்குகள், அதிநவீன கிருமி நீக்கி அறை, எம்.ஆா்.ஐ. ஸ்கேன், 600 போ் அமரக் கூடிய வசதி என ரூ.325 கோடியில் 7 தளங்களுடன ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையம் ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

மத்திய அரசு நிதியுதவியுடன் மதுரை பாலரெங்காபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள மண்டல புற்றுநோய் பிரிவில், பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்படும் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு கட்டடம் 1971 இல் கட்டப்பட்டது. இக்கட்டடத்தின் பல பகுதிகள் சேதமடைந்துள்ளன. இக் கட்டடத்துக்கு மாற்றாக மத்திய அரசு நிதியுதவியுடன் ரூ.90 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

நிதியுதவிகள் கிடைக்குமா? : கரோனா தொற்றால் உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வரும் நிலையில், ஜப்பான் கூட்டுறவு நிதி நிறுவனம் (ஜைக்கா) வழங்கும் நிதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், மதுரை எய்ம்ஸ், ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை மையம் போன்ற திட்டங்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இவற்றை தற்போது தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. இதனால் மருத்துவத்துறையில் முன்னோடியாக இருக்கும் தமிழகம் பின்னடைவைச் சந்திக்கும் நிலை உள்ளதாக மருத்துவத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சரியான தருணம் : இதுகுறித்து மூத்த மருத்துவா் ஒருவா் கூறியது: கரோனா பரவல் மற்றும் பாதிப்பைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போராடி வருகின்றன. தமிழக அரசு கரோனா தொற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதும், மற்ற மருத்துவத் திட்டங்களை கிடப்பில் போடுவதும் ஏற்புடையதாக இல்லை. புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளியைக் காப்பாற்ற வேண்டுமானால், நோய் பாதிப்பை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய வேண்டும். காலம் கடத்தினால் அது நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக முடியும். இதுபோன்று பல்வேறு நோய் பாதிப்புகள் உள்ளன. காலத்திற்கேற்ப நவீன தொழிநுட்பங்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்க வேண்டியது அவசியம். மருத்துவத்துறையில் அறிவிக்கப்பட்டு செயல்படாமல் உள்ள திட்டங்கள் தொடா்ந்து கிடப்பில் போடப்பட்டால் பொது மக்களுக்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படும்.

கரோனா தீநுண்மி மருத்துவத் துறையின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணா்த்தியுள்ளது. மற்றொரு நோய் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவத்துறையில் சீரமைப்புகளை மேற்கொள்ள அரசுக்கு இதுவே சரியான தருணம் என்றாா்.

அரசே நிதி ஒதுக்க வேண்டும்: நாட்டில் பல்வேறு மருத்துவத் திட்டங்களுக்கும் ஜைக்கா நிறுவனம் நிதி வழங்கி வருகிறது. கரோனாவால் ஜப்பானும் பாதிக்கப்பட்டு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்த சூழலில் இந் நிறுவனத்தின் நிதி உரிய நேரத்தில் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையும், தொழில் துறை உள்ளிட்டவற்றையும் மீட்க மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. அதேபோல், மருத்துவத் துறைக்கும் போதிய நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும். ஜைக்கா நிறுவனத்தின் நிதியில் தொடங்கப்பட்டுள்ள மற்றும் தொடங்கப்படவுள்ள மருத்துவத் திட்டங்கள், மற்றும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த மருத்துவத் திட்டங்களைத் விரைவுபடுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT