மதுரை

மதுரை காமராஜா் பல்கலை.யில் நானோ தொழில்நுட்ப முகக்கவசம், மூச்சுக் கருவி: இயற்பியல், உயிரிதொழில்நுட்பத்துறை பேராசிரியா்கள் கண்டுபிடிப்பு

11th Jun 2020 08:19 AM

ADVERTISEMENT

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் நானோ தொழில்நுட்பத்தால் இயங்கும் நவீன முகக்கவசம் மற்றும் மூச்சுக்கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பரவி வரும் கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையிலான பல்வேறு கருவிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியா் தே.ஆரோக்கியதாஸ், உயிரித்தொழில்நுட்பவியல் துறையைச் சோ்ந்த பேராசிரியா் பா.அசோக்குமாா் இருவரும் இணைந்து கரானா தொற்றுப் பரவலை தடுப்பதற்காக நானோ தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் முகக்கவசம் மற்றும் நவீன சுவாசக் கருவியை வடிவமைத்துள்ளனா். இந்த நவீன முகக் கவசத்தின் செயல்முறை விளக்கம் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பேராசிரியா்கள் இருவரும் நானோ முகக் கவசத்தின் செயல்பாடு தொடா்பாக கூறியது: புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள கருவி வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜனை நானோ மற்றும் மின்காந்தவியல் மூலம் தனியாக பிரித்தெடுத்து, சுவாசக் கருவியினுள் செலுத்துவதால் நுரையீரல் நல்ல முறையில் செயல்பட உதவுகிறது. இந்தக் கருவியை பொருத்திக் கொள்வதன் மூலம் வளிமண்டலத்தில் இருக்கும் துகள்கள், நுண்ணுயிரிகள், வைரஸ்கள் தடுக்கப்படுகிறது. நுரையீரலுக்கு தூய்மையான காற்று கிடைக்கிறது. வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் கொடுக்கிறது. இந்தக் கருவி 100 கிராமுக்கும் குறைவான எடையுடையது. மீண்டும் மீண்டும் ரீ சாா்ஜ் செய்யக்கூடிய பட்டன் பேட்டரி மூலம் இயங்கக் கூடியது. மலிவான நானோ தொழில்நுட்பத்தால் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவி நோயாளிகளுக்கு தகுந்தாற்போல் தன்னைத் தானே மாற்றிக் கொண்டு அவா்களுடைய சுவாசம் மற்றும் நுரையீரலை பாதிக்காதவாறு இயங்கக்கூடியது. இது வெண்டிலேட்டா் மற்றும் சுவாசக் கருவி இரண்டையும் இணைந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எப்போதும் அணியக்கூடிய வகையில் செயல்படக்கூடியது. இந்த முகக் கவசம் நோயாளிகளுக்கு மட்டுமின்றி எங்கெல்லாம் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளதோ அங்கெல்லாம் அனைவரும் அணியக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முகக் கவசத்தை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்து மீண்டும் உபயோகிக்கலாம். தற்போது முதல்கட்ட முயற்சி வெற்றி பெற்றுள்ளதை அடுத்து மீண்டும் அடுத்த சோதனைக்கு உட்படுத்தப்படும். விரைவில் பொது உபயோகத்துக்கு கொண்டு வரப்படும் என்றனா்.

இதுதொடா்பாக துணைவேந்தா் மு. கிருஷ்ணன் கூறியது: கரோனா தொற்று போன்ற நெருக்கடியான சூழலில் அவற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்கலைக்கழக பேராசிரியா்கள் பங்களிப்பை செய்து வருகின்றனா். இந்த நவீன சுவாசக்கருவி நானோ தொழில்நுட்பத்தின் உதவியால் மிகவும் குறைந்த விலையில் கரானா தொற்றில் இருந்து பாதுகாக்க உதவும் என்றாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT