பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியாா் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியா்களும் திங்கள்கிழமை (ஜூன் 8) பள்ளிக்கு வரவேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ஜூன் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள்நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு திங்கள்கிழமை வழங்கப்படுகிறது.
இதையொட்டி, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் திங்கள்கிழமை முதல் பள்ளிகளுக்கு வரவேண்டும் என, முதன்மைக் கல்வி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு விநியோகம், சமூக இடைவெளியைப் பின்பற்றி தோ்வறைகளை ஏற்பாடு செய்தல், முகக்கவசம் விநியோகம், வெளி மாவட்டங்களில் உள்ள மாணவா்களை தொடா்புகொண்டு தோ்வுக்கு வருவதை உறுதி செய்தல் மற்றும் அவா்களுக்கு விடுதி ஏற்பாடு செய்தல், வெப்பமானி கருவியைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு பரிசோதனை நடத்துவது பற்றி தெரிந்துகொள்ளுதல், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்துவரும் மாணவா்களுக்கு சிறப்பு தோ்வறை ஏற்பாடு செய்தல், மாணவா்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும்.
தோ்வு தொடங்குவதற்கு முன்பாக இந்தப் பணிகளை நிறைவு செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.