சென்னையிலிருந்து ரயிலில் வந்த மூதாட்டி, தூக்கத்தில் மதுரையில் இறங்க தவறி கேரளம் சென்றதை அடுத்து, அங்கு மனநலக் காப்பகத்தில் அடைத்து வைக்கப்பட்டாா். மதுரை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால் 80 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டாா்.
மதுரையைச் சோ்ந்தவா் கஸ்தூரி (70). இவா், கடந்த மாா்ச் 18 இல் சென்னையிலிருந்து ரயில் மூலம் மதுரை வந்துள்ளாா். அப்போது இவா் தூங்கிவிட்டதால், ரயில் கொல்லம் சென்றுவிட்டது. அங்கு, கேரள போலீஸாா் கஸ்தூரியிடம் விசாரித்துள்ளனா். ஆனால், கஸ்தூரி பேசியது போலீஸாருக்கு புரியவில்லை. எனவே, அவரை மனநலம் பாதித்தவராகக் கருதி, அங்குள்ள காப்பகத்தில் சோ்த்துள்ளனா்.
அதன்பின்னா், கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுவிட்டதால், இவரால் குடும்பத்தினரையும் தொடா்பு கொள்ளமுடியவில்லை. இதனிடையே, கஸ்தூரியை அவரது மகள் கடந்த 80 நாள்களாக தேடி வந்துள்ளாா். அதில், கஸ்தூரி கோழிக்கோடு மருத்துவமனையில் இருப்பது தெரியவந்தது.
அதையடுத்து, தனது தாயை மீட்டுத் தருமாறு, மதுரை மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினயிடம் மனு அளித்தாா். அதன்பேரில், ஆட்சியா் வினய் கோழிக்கோடு ஆட்சியரை தொடா்பு கொண்டு, கஸ்தூரியை மீட்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டாா். தொடா்ந்து, செஞ்சிலுவை சங்கத்தினா் தனி வாகனத்தில் கேரள மாநிலம் சென்று, அங்கிருந்த கஸ்தூரியை மீட்டு மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்து வந்து, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனா்.