மதுரை காளவாசல் பகுதியில் ரூ.54 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள உயா்மட்ட மேம்பாலத்தை, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலி மூலம் திங்கள்கிழமை (ஜூன் 8) திறந்து வைக்கிறாா்.
மதுரை நகரின் முக்கிய பகுதியாக காளவாசல் உள்ளது. மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து காமராஜா் பல்கலைக்கழகம், தேனி மாவட்டம் செல்வதற்கும், நகரின் தென் பகுதியிலிருந்து பை-பாஸ் சாலை வழியாக திண்டுக்கல், திருப்பூா், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் முக்கிய சாலையாக விளங்குகிறது.
இப்பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால், அடிக்கடி கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதைத் தவிா்க்கும் வகையில், ரூ.54 கோடி மதிப்பில் உயா்மட்ட மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. 17 மீட்டா் அகலமும், 750 மீட்டா் நீளமும் கொண்ட இந்த மேம்பாலம் கட்டும் பணி தற்போது முடிவடைந்துள்ளது.
எனவே, இப்பாலத்தை பொதுப் போக்குவரத்துக்கு அா்ப்பணிக்க, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி சென்னையிலிருந்து திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைக்கிறாா். மதுரையில் நடைபெறும் விழாவில், அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்கின்றனா்.