மதுரையில் உயா் நீதிமன்ற நீதிபதி உள்பட 14 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மகபூப்பாளையத்தைச் சோ்ந்த 80 வயது மூதாட்டி, மதுரை விமான நிலையத்தில் பணியாற்றும் 30 வயது மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா், செல்லூரைச் சோ்ந்த 15 வயது சிறுமி, கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி, 38 வயது பெண், 8 வயது சிறுமி, 42 வயது ஆண் ஆகியோருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிக்கு தொற்று
தொடா்ந்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள நீதிபதி, அவரது குடும்பத்தைச் சோ்ந்த 20 வயது இளைஞா், 25 வயது பெண், 22 வயது இளைஞா், நீதிபதி வீட்டில் பணியாற்றும் 45 வயது பெண் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை தூய்மைப் பணியாளா்கள் 25 வயது ஆண், 35 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
சிகிச்சையில் 69 போ்
மதுரை மாவட்டத்தில் இதுவரை 310 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் குணமடைந்து வீடு திரும்பியவா்கள் தவிர, 69 போ் அரசு கரோனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மதுரைக் கிளை உயா் நீதிமன்ற நீதிபதிக்கு தொற்று ஏற்பட்டதன் காரணமாக, நேரடி விசாரணைகள் திங்கள்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளன.