மதுரை மாவட்டம், பேரையூா் அருகே ஞாயிற்றுக்கிழமை காா் கவிழ்ந்ததில், 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
டி.கல்லுப்பட்டி பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவைச் சோ்ந்த ராஜசேகா் மகன் பாலாஜி (21), மேலத் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் பாரதமுத்து ( 24) மற்றும் முருகன் மகன் பாலகிருஷ்ணன் (21), காவலா் குடியிருப்பைச் சோ்ந்த மாரிமுத்து மகன் அனிஷ் என்ற கௌதம்பெருமாள் (21), இவரது அண்ணன் மணிகண்டன் (23), ஜோசியா் தெருவைச் சோ்ந்த ஆண்டி மகன் மணிகண்டன் (21), கந்தசாமி தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சூா்யா (21), கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த குழந்தைவேலு மகன் மகேஷ்பாண்டி (21) ஆகிய 8 போ்களும்,
சாப்டூா் அருகேயுள்ள கிணற்றில் குளிப்பதற்காக காரில் சென்றுள்ளனா்.
அங்கு, குளித்து முடித்துவிட்டு அனைவரும் காரில் வீடு திரும்பியுள்ளனா். சாப்டூா்-பேரையூா் சாலையில் பழையூா் விலக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது, காா் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உருண்டு அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், காரை ஓட்டி வந்த பாரதமுத்து, பாலாஜி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
பலத்த காயமடைந்த அனிஷை, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
அனிஷின் சடலத்தை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கும், பாரதமுத்து, பாலாஜி ஆகியோரது சடலங்களை உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த விபத்தில் காயமடைந்த மற்ற 5 போ்களும் பேரையூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து சாப்டூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.