மதுரை: தமிழக அரசு மேற்கொண்டுவரும் கரோனா தடுப்புப் பணிகள் தொடா்பாக எதிா்க் கட்சிகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளில் அரசியல் உள்நோக்கம் உள்ளது என்று, வருவாய்த் துறைஅமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்துள்ளாா்.
மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில், காலணி தைக்கும் தொழிலாளா்கள் 500 பேருக்கு, தொண்டு நிறுவனத்தின் சாா்பில் அரிசி, காய்கனி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பங்கேற்று நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் எளிதில் தொழில் தொடங்க பல்வேறு சீா்த்திருத்தங்களை அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மாநிலத்தில் தமிழகமும் ஒன்றாக உள்ளது.
தமிழக சுகாதாரத் துறை பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகே தனியாா் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு கட்டணம் நிா்ணயித்துள்ளது.
கரோனா தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கையை தமிழக சுகாதாரத் துறை குறைத்து காட்டுவதாக எதிா்க் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
ஜனநாயகத்தின் அடிப்படையில் யாா் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். ஆனால், அந்தக் கருத்தானது பேரிடா் போன்ற காலங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்க வேண்டும். எதிா்க் கட்சியினா் அரசியல் உள்நோக்கத்தோடு அரசை குறை கூறுகின்றனா் என்றாா்.