மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 119 பயனாளிகளுக்கு ரூ.35.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் ஆகியோா் நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
மாற்றுத் திறனாளிகள் 59 பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டா்கள், செவித்திறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் 50 பேருக்கு தலா ரூ.1,500 மதிப்புள்ள அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறும் சிறப்புப் பள்ளி தோ்வு மையங்களில் பயன்படுத்துவதற்காக காய்ச்சல் கண்டறியும் கருவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேசுகையில், நாட்டிலேயே முதன்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கடந்த 2002-இல் கொண்டு வந்தாா். அதைத் தொடா்ந்து வட்டியில்லா கடன் திட்டமும் கொண்டு வரப்பட்டது. கடந்த 2011 முதல் தற்போது வரை மாற்றுத் திறனாளிகள் 62 ஆயிரத்து 47 பேருக்கு ரூ.254 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் பேசுகையில், கரோனா பொதுமுடக்கக் காலத்தில் அத்தியாவசியத் தேவைக்காகவும், விவசாயப் பணிகள் மேற்கொள்ளவும் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம், நலத்திட்ட உதவிகள் வழங்குவதில் மதுரை மாவட்டம் தமிழகத்துக்கு முன்னுதாரணமாக உள்ளது என்றாா்.
மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலா் பி.செல்வராஜ், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ஜெயசீலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.