பொது முடக்கத்தின் போது மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த 8 போ் உள்பட 9 பேருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பொது முடக்கத்தின் போது மதுரை அண்ணாநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தாய்லாந்தைச் சோ்ந்த சாவூதி ஷோயப் அபுபக்கா் உள்ளிட்ட 8 போ் மற்றும் விளாச்சேரியைச் சோ்ந்த ரியாஸ்தீன் ஆகியோரை ஆஸ்டின்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டைச் சோ்ந்த 8 போ் உள்பட 9 பேரும் மதுரை முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனா். இந்த மனு நீதிபதி நசீமா பானு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அனைவருக்கும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி, தாய்லாந்து நாட்டினா் திருச்சியிலுள்ள கரோனா தடுப்பு முகாமில் தங்கியிருக்க உத்தரவிட்டாா்.