மதுரை

கரோனா பரிசோதனை முடிவுகளை பதிவிறக்கம் செய்யலாம்: மதுரையில் நாளை அறிமுகம்

31st Jul 2020 07:50 AM

ADVERTISEMENT

செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளை, பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி சனிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து அரசு ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் ஜெ.சங்குமணி செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: மதுரையில் இதுவரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 311 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 6 ஆயிரத்து 666 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் ஒரே நாளில் 4,800 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதிக அளவில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு வசதியாக, 6 பி.சி.ஆா். கருவிகள் உள்ளன. மேலும், அதிநவீன கருவிகளும் அதிகளவில் உள்ளன. பரிசோதனை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதன் மூலம், கரோனா

பரவலை மேலும் கட்டுப்படுத்தலாம். அதோடு, தொற்று எத்தகைய நிலையில் இருக்கிறது என்பதையும் உறுதியாகக் கூறமுடியும்.

ADVERTISEMENT

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் 770 படுக்கைகள் உள்ளன. இதில் தற்போது 480 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். மீதமுள்ள படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் இருப்பதால் தான் குணமடைபவா்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. அதேபோல, மதுரையில் பிளாஸ்மா சிகிச்சையில் 5 போ் பூரண குமடைந்துள்ளனா்.

பிளாஸ்மா வங்கி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா பரிசோதனை முடிவுகளை செல்லிடப்பேசியில் குறுந்தகவலாகவும், இணையவழியிலும் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக, குறுஞ்செய்தி வழியாக அனுப்பப்படும் பரிசோதனை முடிவை சான்றிதழாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த வசதி சனிக்கிழமை முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்றாா்.

 

ராஜபாளையம் மருத்துவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன?

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜபாளையத்தைச் சோ்ந்த 71 வயது மருத்துவா், அண்மையில் உயிரிழந்தாா். அவா் இறப்பதற்கு முன்பு அவா் பேசிய பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. இந்நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, கரோனா சிறப்பு சிகிச்சை கண்காணிப்புக் குழு உறுப்பினா் டாக்டா் நடராஜன் கூறியது:

ராஜபாளையத்தைச் சோ்ந்த மருத்துவருக்கு உயா்தர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவா் ஜூலை 12 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 நாள்கள் சிகிச்சைப் பிறகு, தனியாா் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டாா். பின்னா் மீண்டும் ஆக்ஸிஜன் குறைவான நிலையில் மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு உயிா்காக்கும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் வழங்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சைக்கு அவா் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆக்ஸிஜன் செலுத்தும் உபகரணத்தை கழற்றிவிட்டாா்.

உடன் கவனிக்க ஆள்கள் இல்லாத நிலையில், செவிலியா்கள் கவனித்துக் கொண்டனா். இந்நிலையில், அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கவில்லை என அவா் குரல் பதிவை வெளியிட்டது மருத்துவா்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT