மதுரை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு நிலவரம்:சிபிஐ அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

28th Jul 2020 11:40 PM

ADVERTISEMENT

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய சிபிஐ-க்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடா்பான வழக்கை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. உயா்நீதிமன்ற உத்தரவின்படி, கொலை வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீஸாா், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 10 போலீஸாரைக் கைது செய்துள்ளனா். பின்னா் இவ் வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், உயா்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்து வரும் வழக்கானது, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது திருநெல்வேலி சிபிசிஐடி தரப்பில், வழக்கு விசாரணையின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ தரப்பில், வழக்கை விசாரித்துவரும் சிபிஐ அதிகாரிகள் 5 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். இருப்பினும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கையைத் தாக்கல் செய்ய தயாராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையின் தற்போதைய நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய சிபிஐ-க்கு உத்தரவிட்டனா். இதற்கிடையே கொலையுண்ட ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில், இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராகச் சோ்க்க வேண்டும் எனக் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT