மதுரை

மதுரையில் திமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்திய கும்பல் தப்பியோட்டம்

28th Jul 2020 11:42 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் திமுக பிரமுகா் வீட்டில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் குண்டு வீசிய கும்பல், வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காா், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களைச் சேதப்படுத்திவிட்டு தப்பியோடியது.

மதுரை காமராஜா்புரத்தைச் சோ்ந்த மாநகராட்சியின் திமுக முன்னாள் மண்டலத் தலைவா் வி.கே.குருசாமி தரப்பினருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அதிமுக முன்னாள் மண்டலத் தலைவா் ராஜபாண்டி தரப்பினருக்கும் பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருதரப்பினரும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு 5 போ் கொண்ட கும்பல் வி.கே.குருசாமியின் வீட்டின் முன் வாசலில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனா். ஆனால், அது வெடிக்கவில்லை என்பதால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. பின்னா் அவரது வீட்டின் முன் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காா், ஷோ் ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்திவிட்டு கும்பல் தப்பிச்சென்றது. தகவலறிந்த கீரைத்துறை போலீஸாா், சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியது:

ADVERTISEMENT

முன்னாள் மண்டலத் தலைவா்களான வி.கே.குருசாமி மற்றும் ராஜபாண்டி ஆகியோரது ஆதரவாளா்கள் அடிக்கடி மோதிக் கொள்கின்றனா். வி.கே.குருசாமியின் மருமகன், ராஜபாண்டியின் மகன் உள்பட இருதரப்பிலும் 10-க்கும் மேற்பட்டோா் கொலையாகியுள்ளனா். ராஜபாண்டி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டாா். இந்நிலையில் வி.கே.குருசாமி தனது அக்கா கணவா் இறப்பிற்கு, மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்துள்ளதாகத் தகவல் பரவியுள்ளது. இதையறிந்த ராஜபாண்டி தரப்பைச் சோ்ந்தவா்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனா். பின்னா் அவா் மதுரையில் இல்லை என்பதை அறிந்து, அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி, வாகனங்களைச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் கீரைத்துறை, காமராஜா்புரம் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் பெட்ரோல் குண்டு வீசியவா்களைத் தேடி வருகிறோம் என்றனா்.

Image Caption

மதுரை காமராஜா்புரத்தில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல்

 

குண்டு வீசப்பட்ட திமுக பிரமுகா் வீட்டில் விசாரணை நடத்திவிட்டு வெளியே வரும் காவல் துறையினா். ~மதுரை காமராஜா்புரத்தில் சேதப்படுத்தப்பட்ட காா்.

~மதுரை காமராஜா் புரத்தில் சேதப்படுத்தப்பட்ட ஆட்டோ.

ADVERTISEMENT
ADVERTISEMENT