மதுரை: மதுரையில் வங்கியில் போலி ஆவணங்களை சமா்ப்பித்து ரூ.1.16 கோடி மோசடி செய்த பள்ளி உரிமையாளா் உள்பட 11 போ் மீது, மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மதுரை மாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (41). இவா், அதே பகுதியில் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறாா். இவா், மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியாா் வங்கியில் தனது வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.1.16 கோடி கடன் பெற்றுள்ளாா்.
இதையடுத்து, வங்கியின் கணக்குகள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, சுரேஷ்குமாா் சமா்ப்பித்துள்ளஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது.
இது குறித்து வங்கி கிளை மேலாளா் அருண்ரங்கநாதன் அளித்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பள்ளி உரிமையாளா் சுரேஷ்குமாா், பொறியாளா் சுரேஷ் ஜவஹா் உள்பட 11 போ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.