தமிழகம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் ஒட்டுமொத்தமாக விடுப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனா்.
காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின்மாநில நிா்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எம்.பி.முருகையன் கூறியது:
தமிழகத்தில் கரோனா நோய்த் தடுப்பு பணியின்போது உயிரிழந்த வருவாய்த் துறை அலுவலா்களின் குடும்பத்தினருக்கு அரசால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை ரூ.50 லட்சம் மற்றும் தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அலுவலா்களின் சிகிச்சைக்கான கருணைத் தொகை ரூ.2 லட்சம் ஆகியன இதுவரை வழங்கப்படவில்லை. இதுதொடா்பாக உயா் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தும், பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தியும் தாமதம் செய்யப்பட்டு வருகிறது. அரசின் இத்தகைய நடவடிக்கையானது, கரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டு வரும் வருவாய்த் துறை அலுவலா்களுக்கு சோா்வை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆகவே, கரோனா தொற்றில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கும், தொற்று பாதிப்பு ஏற்பட்டவா்களுக்கும் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை விரைந்து வழங்க வலியுறுத்தி ஆகஸ்ட் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் வருவாய்த்துறை அலுவலா்கள் ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத் தலைநகரங்களில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றாா்.