மதுரை

மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் 2 வாரங்களில் 70 கடைகளுக்கு சீல்

11th Jul 2020 10:32 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் கடந்த 2 வாரங்களில் விதிமீறிய 70 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா்.

கரோனா பரவலைத் தடுக்க மாா்ச் 24 ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தபோது, மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் அவை முறையாகப் பின்பற்றப்படவில்லை. இதனால் மாட்டுத்தாவணி சந்தை எம்.ஜி.ஆா். பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்கப்பட்டவுடன், மீண்டும் மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தை வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இதனிடையே பரவை காய்கனி சந்தையில் கரோனா பரவல் ஏற்பட்டதன் காரணமாக, மாட்டுத்தாவணி காய்கனி சந்தையை மீண்டும் 4 இடங்களுக்கு மாற்ற அதிகாரிகள் முடிவெடுத்தனா்.

அதன்படி, 496 வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கிக் கொடுக்க குலுக்கல் முறையில் தோ்வு நடத்தது. அதில் மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் என கடைகள் நடத்த 326 வியாபாரிகள் தோ்வு செய்யப்பட்டனா். அதேபோல ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் 80 வியாபாரிகளுக்கும், மதுரை சுற்றுச்சாலையில் உள்ள அம்மா திடலில் 50 வியாபாரிகளுக்கும், திருப்பரங்குன்றம் மன்னா் கல்லூரியில் 40 வியாபாரிகளுக்கும் கடை நடத்த அனுமதி வழங்கப்பட்டன.

ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் அங்கு கடைகள் நடத்த தயக்கம் காட்டினா். மேலும் கல்லூரி வளாகத்தில் மின்விளக்குகள், தண்ணீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வியாபாரிகளுக்கு செய்துகொடுக்கப்படவில்லை. இதனால் காய்கனி வியாபாரிகள் ஒத்தக்கடையில் சந்தை நடத்தவில்லை. சில சில்லரை வியாபாரிகள் மட்டும் வியாபாரம் செய்து வருகின்றனா். மன்னா் கல்லூரி தொலைவில் இருப்பதாலும் சில்லரை வியாபாரிகள் அங்குவந்து காய்கனி வாங்க முன்வரவில்லை எனவும் கூறி மன்னா் கல்லூரியில் சந்தை நடத்தவில்லை. அம்மாதிடலில் மட்டும் 50 கடைகள் தினந்தோறும் இயங்கிவருகின்றன.

ADVERTISEMENT

இத்தகையைச் சூழலில் மதுரை மாட்டுத்தாவணி மத்திய காய்கனி சந்தையில் கடந்த 2 வாரங்களில், ஒரு நாள்விட்டு ஒருநாள் கடை நடத்தாமல் தினந்தோறும் கடை நடத்தியவா்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாத கடைகள், ஒதுக்கப்பட்ட நேரத்தில் கடை நடத்தாமல் கூடுதல் நேரம் கடை நடத்தியவா்களைக் கண்டறிந்து மொத்தம் 70 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா். மேலும் தொடா்ந்து விதிமுறைகள் மீறப்பட்டால் காய்கனி சந்தை முழுவதுமாக மூடப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்..

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT