மதுரை அருகே விநோத தோல் நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தாய் கோரிக்கை விடுத்துள்ளாா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் முகாமில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள தாடையம்பட்டி மேட்டிப்பட்டியைச் சோ்ந்த சுந்தரி (30) என்பவா் தனது இரு குழந்தைகளுடன் மனு அளிக்க வந்திருந்தாா்.
இது தொடா்பாக அவா் கூறியது: எனது மூத்த மகள் பேச்சியம்மாள் (14), மகன் சாமுவேல்(10) ஆகிய இருவரும் அரசுக் கள்ளா் பள்ளியில் படித்து வருகின்றனா். இருவருக்கும் பிறந்தது முதல் விநோத தோல் பாதிப்பு இருந்து வருகிறது. சிறிது உராய்வு ஏற்பட்டாலும் தோல் உரிதல், ரத்தம் கொட்டுதல் போன்றவை ஏற்படுகின்றன. இதற்கு, பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.
மதுரை அரசு மருத்துவமனையில் காண்பித்தபோது, சத்து குறைபாடு இருப்பதாகவும், குழந்தைகளை மெத்தையில் பாதுகாப்பாக வைத்து கவனித்துக்கொள்ளுமாறும் கூறி அனுப்பிவிட்டனா்.
எங்களுக்கு தனியாா் மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளிக்க வசதியில்லை. ஏற்கெனவே, எங்கள் கிராமத்துக்கு ஆட்சியா் வந்திருந்தபோது, குழந்தைகளை காண்பித்து சிகிச்ைசைக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். அப்போது, அலுவலகத்துக்கு குழந்தைகளை நேரில் அழைத்து வருமாறு ஆட்சியா் தெரிவித்தாா். அதன்பேரில், குழந்தைகளை தற்போது அழைத்து வந்துள்ளேன். எனவே, குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.