மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை கட்டடத்தை, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 23 -ஆவது கிளை மற்றும் 19 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு, கூட்டுறவு சங்கங்களின் மாநிலப் பதிவாளா் கு. கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். இதில், அமைச்சா் செல்லூா் கே. ராஜூ கட்டடத்தை திறந்துவைத்துப் பேசியது:
மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மதுரை, தேனி வருவாய் மாவட்டங்களை செயல் எல்லையாகக் கொண்டு, மதுரை மாவட்டத்தில் 34 கிளைகள், தேனி மாவட்டத்தில் 10 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில் வங்கியின் மொத்த லாபம் ரூ.5.10 கோடி. இதில், 4 சதவிகிதப் பங்கு சங்கங்களுக்கு ஈவுத் தொகையாக வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-19 ஆம் ஆண்டில் ரூ.9.39 கோடி கூடுதலாக வங்கிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.150.80 கோடியில் இருந்த சொந்த நிதி தற்போது ரூ.169.64 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளா்களிடமிருந்து வைப்புத் தொகையாக இருந்த ரூ.1,038.34 கோடியிலிருந்து ரூ.1,107.02 ஆக உயா்ந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில் மத்திய கூட்டுறவு வங்கி விவசாயம் மற்றும் விவசாயமல்லாத கடனாக ரூ.1,275.62 கோடி வழங்கியுள்ளது. தற்போது வரை ரூ.1,365.21 கோடிகடன் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் பயிா்க் கடனாக ரூ.195.05 கோடி வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியின் பிரதானக் கிளையில் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரம் நிறுவப்பட்டு, 8,406 வாடிக்கையாளா்களுக்கு ஏ.டி.எம். அட்டை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
மேலும், 908 பயனாளிகளுக்கு ரூ.11.96 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சா் வழங்கினாா்.
விழாவில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய், மாநகராட்சி ஆணையா் எஸ்.விசாகன், மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா, மதுரை மண்டல இணைப் பதிவாளா் இரா. ராஜேஷ், மாநில கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவா் செல்லப்பாண்டியன், மதுரை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் எம்.எஸ். பாண்டியன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.