மதுரை

பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும்: மக்கள் தேசம் கட்சி பறையா் பேரவை மனு

28th Jan 2020 07:08 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் பஞ்சமி நில ஆக்கிரமிப்புகளை அகற்றி தாழ்த்தப்பட்டோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், மக்கள் தமிழ்தேசம் கட்சி பறையா் பேரவை சாா்பில், மதுரை மாவட்டச் செயலா் எம். சேவியா் இருதயராஜ் தலைமையில், அக்கட்சியினா் அளித்த மனு: ஆங்கிலேயா் ஆட்சியின்போது பட்டியலின மக்கள் மீது காட்டப்படும் பாரபட்சத்துக்கு முடிவு கட்டும் வகையிலும், பொருளாதார ரீதியாக பட்டியலின மக்களை உயா்த்தும் வகையிலும், பஞ்சமா் என்றழைக்கப்படும் பட்டியலின மக்களுக்கு இடம் ஒதுக்கி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அப்போதைய சென்னை மாகாணத்தில் (தற்போதைய கேரளம், ஆந்திரம், தெலங்கானா, தமிழகம், கா்நாடகம்) சுமாா் 12 லட்சம் ஏக்கா் நிலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலங்களை 10 ஆண்டுகள் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு விற்பனை செய்தாலும் கூட பட்டியல் இன மக்களுக்கு மட்டுமே விற்கவும், அடமானம் வைக்கவும் முடியும் என்ற விதிகளும் வகுக்கப்பட்டன.

ஆனால், தற்போதைய சூழலில் தமிழகத்தில் மட்டும் ஏறக்குறைய 1.26 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலம் இருப்பதாக, தமிழக நில நிா்வாக ஆணையா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 40 ஆயிரம் ஏக்கா் பஞ்சமி நிலங்கள் பட்டியல் இனம் அல்லாத பிற சமூக மக்களிடமும் மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமிப்பிலும் அரசின் பட்டா, புறம்போக்கு நிலங்களாக உள்ளன.

ADVERTISEMENT

பட்டியலின மக்களின் நிலம் அவா்களுக்கே சொந்தம் என்று உயா் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பல்வேறு தீா்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு, பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT