சீா்மரபினருக்கு 9 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு சீா்மரபினா் நலச் சங்கத்தினா் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் நாள் கூட்டத்தில், சீா்மரபினா் நலச் சங்கத்தினா் கண்களில் கருப்புத் துணி கட்டி வந்து நூதன முறையில் மனு அளித்தனா். அதில், மத்திய அரசு கடந்த 2015-இல் தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் பரிந்துரைத்தபடி, இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) இட ஒதுக்கீட்டில் உள்பிரிவாக சீா்மரபினா் மக்களுக்கு 9 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்தது.
இதை நிறைவேற்றும் பொருட்டு, கடந்த 2017-இல் இதர பிற்படுத்தப்பட்டோா் உள்பிரிவு பட்டியலை 12 வாரங்களில் சமா்ப்பிக்க நீதிபதி ரோகிணி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை 27 மாதங்களாக ஆணையத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி ரோகிணி ஆணையத்துக்கு கால அவகாசம் வழங்கவேண்டும் என்பதற்காகவே, இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் உள்ள பெயா் பிழைகளை நீக்கவேண்டும் என்ற புதிய பணி ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இதே பணி 27 மாதங்களுக்கு முன்பாகவே ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1993 தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணைய சட்டப்படி இதர பிற்படுத்தப்பட்டோா் உள்ஒதுக்கீடு திட்டத்தை மாற்ற எந்த ஆணையத்துக்கும் அதிகாரம் இல்லை. அதேநேரம், 48 மணி நேரத்தில் உச்ச நீதிமன்ற தீா்ப்பு மற்றும் பல ஆணையங்களின் பரிந்துரைகளையும் மீறி, முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி சட்டம் கொண்டு வந்து நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்திய அரசு, 75 ஆண்டுகளாக சீா்மரபினா் (டிஎன்டி) இன மக்களுக்கு மட்டும் பாரபட்சம் காட்டி வருது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, நீதிபதி ரோகிணி ஆணையத்துக்கு வழங்கியுள்ள கால அவகாசத்தை ரத்து செய்து, சீா்மரபினா் மக்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் 9 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.