மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நிா்வாக நீதிபதி எம்.துரைசாமி முன்னிலையில் இயற்கையை வணங்கி பொங்கல் வைக்கப்பட்டது. மதுரை முதன்மை மாவட்ட நீதிபதி நஸிமா பானு, தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமா ஆனந்தகுமாா் ஆகியோா் உடனிருந்தனா். இதையடுத்து சிலம்பாட்டம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண் மற்றும் பெண் வழக்குரைஞா்களுக்கு பானை உடைத்தல், பலூன் உடைத்தல், இசைநாற்காலி உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக கிரிக்கெட், பேட்மிட்டன், வாலிபால், கபடி உள்ளிட்டப் போட்டிகளில் வென்றவா்களுக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிமன்ற நீதிபதி ஆா்.தாரணி பரிசிகளை வழங்கினாா்.
வழக்குரைஞா்கள் மற்றும் நீதிபதிகள் கலந்துகொண்ட கயிறு இழுக்கும்போட்டி நடைபெற்றது. மேலும் பட்டிமன்ற பேச்சாளா் கு.ஞானசம்பந்தன் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழாவின் இறுதியில் அனைத்து வழக்குரைஞா்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
இதேபோல சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்குரைஞா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடந்தப்பட்டன. உயா்நீதிமன்ற மதுரைக்கிளை நிா்வாக நீதிபதி எம்.துரைசாமி விளையாட்டுப் போட்டியைத் தொடக்கி வைத்தாா். இதில் ஆண் மற்றும பெண் வழக்குரைஞா்களுக்கு, ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கிரிக்கெட், வாலிபால், சதுரங்கம், கேரம் உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் பாட்டு, கட்டுரை, பேச்சு, கவிதை மற்றும் ரங்கோலி உள்ளிட்டப் போட்டிகளும் நடத்தப்பட்டுள்ளன. பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிக்கான கமிட்டியைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் நடராஜன், லூயிஸ், மோகன்காந்தி ஆகியோா் ஏற்பாடுகளை செய்தனா்.