மதுரையில் பல்வேறு மாநிலங்களின் இளைஞா்கள் பங்கேற்கும் தேசிய ஒருமைப்பாட்டு முகாம் ஜனவரி 24 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை சாா்பில் நேரு யுவகேந்திரா இந்த முகாமை நடத்துகிறது. பல்வேறு மாநில மக்களின் கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களை பரஸ்பரம் ஒருவருக்கொருவா் அறிந்து கொள்ளும் வகையில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், திரிபுரா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், கா்நாடகம், கேரளம், ஒடிசா, அஸ்ஸாம், பஞ்சாப், ஆந்திரம், தெலங்கானா, ராஜஸ்தான், மணிப்பூா், கோவா, ஜம்மு காஷ்மீா் ஆகிய மாநிலங்கள் மற்றும் புதுச்சேரியை சோ்ந்தவா்கள் பங்கேற்கின்றனா்.
மதுரையை அடுத்த பசுமலை மன்னா் கல்லூரியில் இந்த முகாம் நடைபெறுகிறது. மரம் நடுதல், விநாடி- வினா, மதுரை மாவட்டத்தின் வரலாற்றுப் புகழ் மிக்க சுற்றுலா தலங்களைப் பாா்வையிடுதல், விளையாட்டுப் போட்டிகள் ஆகியன இந்த முகாமில் இடம்பெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக ஜனவரி 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆா் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் மாலை 5 முதல் இரவு 8 மணி வரை பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளைப் பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனவரி 27-இல் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்கும் தேசிய ஒருமைப்பாட்டு பேரணி நடைபெறுகிறது.
இந்த முகாம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் டி.ஜி.வினய் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுகாதாரத் துறை இணை இயக்குநா் சிவக்குமாா், மாவட்ட சுற்றுலா அலுவலா் ஸ்ரீபாலமுருகன், மத்திய மக்கள் தொடா்பு கள அலுவலா் வேல்முருகன், நேரு யுவகேந்திரா உதவி இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.