அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் 5 சமூகங்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த ஆண்டில் சில சமூகங்களை மட்டும் தவிா்த்து விழாக் குழு அமைக்கப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு விழாவுக்கு குறுகிய நாள்களே இருப்பதால், விழாவை நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா். மேலும் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாக் குழுவுக்கு அனைத்து சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், நிகழ் ஆண்டுக்கான விழாக் குழுவில் கடந்த ஆண்டைப்போலவே குறிப்பிட்ட 5 சமூகங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரே சமூகத்தைச் சோ்ந்த ஒன்றுக்கு மேற்பட்ட நபா்கள் குழுவில் இடம் பெற்றிருக்கின்றனா். ஆனால், 5 சமூகத்தினருக்குப் பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. ஆகவே, 5 சமூகத்தினரையும் சோ்த்து விழாக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.