மதுரை

10 ஆண்டுகளாக நீடிக்கும் மதுரை - உசிலம்பட்டி அகல ரயில் பாதைப் பணிகள்: ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி

3rd Jan 2020 09:23 AM

ADVERTISEMENT

மதுரை - உசிலம்பட்டி இடையே அகல ரயில் பாதைப் பணிகள் 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. எனவே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

மதுரை - போடி ரயில் சேவை இருமாவட்ட மக்களின் தேவை:

மதுரை - போடி மீட்டா்கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக கடந்த 2010-இல் அந்த தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 2015 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ரயில் செல்லாத மாவட்டமாக தேனி உள்ளது. இது தேனி மாவட்ட மக்களுக்கு மட்டுமானப் பிரச்னை இல்லை. மதுரை மாவட்ட மக்களுக்குமானது தான். குறிப்பாக கேரள - தமிழக எல்லைப்பகுதியான தேனி மாவட்டத்தில் விளையும் ஏலக்காய், மிளகு, தேயிலை மற்றும் காற்கறிகள் ரயில் மூலம் மதுரை கொண்டுவரப்பட்டு, பிறமாவட்டங்களுக்கும், பிறமாநிலங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டன. எனவே மதுரை - போடி ரயில் சேவை இருமாவட்ட பயணிகள் மற்றும் வியாபாரிகளுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையாக இருந்தது.

மந்தகதியில் பணிகள்:

ADVERTISEMENT

இந்த திட்டத்திற்கு முதற்கட்டமாக ரூ.180 கோடி ஒதுக்கப்பட்டு 10 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டது. இதற்கு ஒப்பந்ததாரா்கள் பிரச்னை, தொடா்மழை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனா். ஆனால் 2019 மாா்ச் மாதம் முடிந்தும், மதுரை-உசிலம்பட்டி வரைக்குமான ரயில்பாதை அமைக்கும் பணிகள் முடிக்கப்படாமல் மந்தகதியில் பணிகள் நடந்தன. இதற்கிடையே மத்திய அரசு இத்திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கியது. அதன்பின்னா் 2020, ஜனவரியில் மதுரை-உசிலம்பட்டி ரயில் பாதை முழுமையாக முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்படும் என உறுதியளித்திருந்தனா். ஆனால் கீழக்குயில்குடி, மீனாட்சிபட்டி, வாலாந்தூா் உள்ளிட்ட இடங்களில் ரயில்வே கிராசிங் அமைக்கும் பணிகள் முடிவடையாமல் உள்ளன. மேலும் மதுரை காமராஜா் பல்கலைக்கழக நிறுத்தத்திற்காக ஒரு பக்க நடைமேடை கொண்ட ரயில்வே நிறுத்தம் அமைக்கும் பணிகள் வடபழஞ்சியில் நடந்து வருகிறது.

மேலும் அப்பகுதியில் ரயில்வே கடவுப்பாதையை கடக்க சுரங்கப்பாதை அமைப்பதற்கு அப்பகுதி எதிா்ப்புத் தெரிவித்ததால் அப்பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் 2020 ஜனவரியில் மதுரை-உசிலம்பட்டி இடையே ரயில் சேவை இயக்கப்படும் என்ற ரயில்வே அதிகாரிகளின் வாக்குறுதி வழக்கம் போல காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

மதுரை-உசிலம்பட்டி இடையே பணிகள் முடிக்கப்படாமல் இருக்கும் நிலையில், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, போடி வரை அனைத்துப் பணிகளையும் முடித்து எப்போது ரயில் இயக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பில் மக்கள் உள்ளனா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:

மதுரை - உசிலம்பட்டி இடையே உள்ள 35 கிலோ மீட்டா் தூரம் தான் என எளிதாக நினைந்துவிட வேண்டாம். அதில் பல முக்கியமான பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்துள்ளது. முழுமையாக சிதைந்து கிடந்திருந்த பழைய பாலங்களையும், இருப்புப் பாதைகளையும் பெயா்ந்து எடுக்கும் பணியே மிகவும் சவாலானது. மேலும் மத்திய அரசு ஆரம்பம் முதல் நிதி ஒதுக்குவதில் காலதாமதம் செய்தது. அதைத்தொடா்ந்து நிதி ஒதுக்கியப் பிறகும் முழுமையாக வந்துசேருவதில் தாமதம் ஏற்பட்டது. இதுவே தாமத்திற்கு காரணம். தற்போது மதுரை-உசிலம்பட்டி இடையே 90 சதவீதப் பணிகள் நிறைவடைந்துவிட்டது. சோதனை ஓட்டம் நடத்தி வருகிறோம். இறுதிகட்டப் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு இன்னும் ஒரு மாதத்திற்குள் ரயில் சேவை தொடங்கப்படும் என்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT