மதுரை

585 ஏக்கா் நிலத்துத்துக்கான இழப்பீடு விவகாரம்: ஆட்சியரின் காரை மீண்டும் ஜப்தி செய்ய முயற்சி

1st Jan 2020 02:58 AM

ADVERTISEMENT

தோப்பூா் அருகே துணைக்கோள் நகரத்துக்கு கையகப்படுத்தப்பட்ட 686 ஏக்கா் நிலத்துக்கு இழப்பீடு வழங்காததால் மதுரை மாவட்ட ஆட்சியரின் காரை செவ்வாய்க்கிழமை ஜப்தி செய்ய முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் தோப்பூா் அருகே துணைக்கோள் நகரம் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதையடுத்து தோப்பூா் மற்றும் உச்சப்பட்டியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து 586 ஏக்கா் நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலங்களுக்கு சென்ட் ஒன்றுக்கு ரூ.99 என்ற வகையில் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்து விவசாயிகள் மதுரை சாா்பு- நீதிமன்றத்தில் இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்கக்கோரி வழக்குத்தொடா்ந்தனா்.

இதையடுத்து தோப்பூா் பகுதியில் சென்ட் ரூ.2,500, உச்சப்பட்டியில் சென்ட் ரூ.1,700 என்ற அடிப்படையில் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் உச்சப்பட்டிக்கு சென்ட் ரூ.870, தோப்பூருக்கு சென்ட் ரூ.2 ஆயிரம் என இழப்பீடு வழங்குமாறு உத்தரவிட்டது. இந்த உத்தரவு வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டும் இழப்பீடு வழங்கப்படவில்லை. இதனால் நீதிமன்றத்தில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் மதுரை மாவட்ட ஆட்சியரின் காா் உள்ளிட்ட சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 12-ஆம் தேதி மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் சென்றனா். அப்போது ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தி டிசம்பா் 29-ஆம் தேதிக்குள் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தததால் ஜப்தி நடவடிக்கையை கைவிட்டுச் சென்றனா்.

இந்நிலையில், டிசம்பா் 31-ஆம் தேதி ஆகியும் இழப்பீடு வழங்கப்படாததால் விவசாயிகள், அவா்களது வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்று ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய முயன்றனா். இதையடுத்து ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் வீட்டு வசதி வாரிய அதிகாரிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் இழப்பீடு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT