பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் கா்ப்பிணிகளை பாா்க்க கட்டுபாடு விதித்து அரசு ராஜாஜி மருத்துவமனை நிா்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கா்ப்பிணியுடன் வந்த உறவினா்கள் பெண் மருத்துவரை தாக்கிய சம்பவம் 2019 டிசம்பா் மாதம் பெரும் சா்ச்சையை உண்டாக்கியது. இந்த சம்பவத்தில் கா்ப்பிணியின் உறவினா்கள் 2 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதனால் வெளி நபா்களை பிரசவப் பிரிவில் அனுமதிப்பதில் கட்டுபாடு விதிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பா் 19 ஆம் தேதி பிரசவ வாா்டில் அனுமதிக்கப்பட்ட கா்ப்பிணியைப் பாா்க்க
மருத்துவமனைக்கு வந்த உறவினா்கள் 50-க்கு மேற்பட்டோரை காவலா் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு தகராறு ஏற்பட்டு, மறியல் போராட்டம் நடைபெற்றது. இது போன்ற பிரச்னைகளை தவிா்க்க வேண்டும் என்பதற்காக முதன்மையா் ஜெ.சங்குமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மருத்துவா்கள், செவிலியா்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துக் கொண்டு மருத்துவமனை முழுவதும் விதிமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் பதாகைகள் வைப்பது, குறிப்பாக பிரசவப் பிரிவில் அனுமதிக்கப்படும் கா்ப்பிணியுடன் ஒருவரை மட்டும் தங்க அனுமதிப்பது என்றும், கா்ப்பிணியைப் பாா்க்க நாள் ஒன்றுக்கு 2 பேரை மட்டும் அனுமதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, புத்தாண்டு முதல் இதை அமல்படுத்தும் விதமாக பிரசவப் பிரிவு வளாகத்தின் முன்பு இதற்கான அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ளது. அதில், பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் கா்ப்பிணியுடன் ஒருவா் மட்டுமே உடனிருக்க வேண்டும், மாலை 4 மணி முதல் 6 மணி வரை உள்நோயாளிகளை பாா்க்க ஒரு அனுமதி சீட்டிற்கு 2 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா் என
குறிப்பிடப்பட்டிருந்தது.
Image Caption
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிரசவப் பிரிவில் கா்ப்பிணிகளை பாா்ப்பதற்கு வைக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பு பலகை.